LATEST

Friday, December 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் வரலாறு -09.கன்னியாகுமரி

Magme Guru

9. கன்னியாகுமரி வரலாறு

தலைநகரம் : நாகர்கோவில்
பரப்பு : 1,684.4 ச.கி.மீ
மக்கள் தொகை : 1,870,374 (2011)
எழுத்தறிவு : 1,548,738 (91.75 %)
ஆண்கள் : 926,345
பெண்கள் : 944,029
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 1,111

பெயர் வரலாறு:

• சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது.
• குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

உள்ளாட்சி நிறுவனங்கள்:
• நகராட்சிகள்- 4, (நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை);
• நகரியம்-1 (கன்னியாகுமரி);
• ஊராட்சி ஒன்றியம் - 9; பேரூராட்சிகள் - 67; ஊராட்சி-88.

சட்டசபை தொகுதிகள்: 7
(கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர்.

நாடாளுமன்ற தொகுதி:1
(நாகர்கோவில்).

மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர்:
• தொல்காப்பியர், அதங்கோட்டாசான், திருவள்ளுவர் போன்ற பழங்கால தமிழ் அறிஞர்களும், இக்காலத்தில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, நூறு அவதானங்களை செய்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர், டி.கே. எஸ். சகோதரர்கள், தோழர் ஜஂவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பேரா பா. நடராசன், நாஞ்சில் மனோகரன் போன்றோர் முக்கியமானவர்கள்.

வரலாற்றில் கன்னியாகுமரி:

• வட வேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கிய அதங்கோட்டாசான் குறிப்பிடுகிறார்.
• கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்த ஏராத் தோனஸ் என்ற அயல்நாட்டுப் பயணி குமரிமுனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
• கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிபுளூஸ், தாலமி இப்பகுதி பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
• மதுரை தொடங்கி குமரி வரையுள்ள பகுதி 'பாண்டி மண்டல'மாக இருந்தது. அதனால் இப்பகுதிபாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது.
• இதற்கான சான்றுகளாக காட்டக்கூடிய ஊர்கள்: பாண்டியன் அணை, பாண்டியன் கால்வாய், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் என்ற பெயர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது.
• பாண்டிய பேரரசு குலைந்த பின்னர் இப்பகுதி மூன்றாகத் திகழ்ந்தது.
• புறத்தாய நாடு (கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும் சேர்ந்த பகுதி)
• நாஞ்சில் நாடு (அகத்தீஸ்வரம், தோவாளை வட்டங்களில் புறத்தாய நாடு நீங்களான பகுதி)
• வேணாடு (கல்குளம், விளவங்கோடு) என்னும் இரு வட்டங்களையும் கொண்டது.

• முதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சோழராட்சிக்கு உட்பட்ட வேளையில் இப்பகுதியும் சோழராட்சியின் கீழ் வந்தது.
• சேரநாட்டின் பாஸ்கர ரவியை தோற்றோடச் செய்து, அவன் கப்பற்படையைத் தீயிட்டு பொசுக்கினான் இராஜராஜன்.
• அதனால் இராசராச சோழனுக்கு 'கேரளாந்தகன்' (கேரளனுக்கு எமன்) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது. சோழர்களின் கல்வெட்டு குகநாதசாமி கோயிலில் கிடைக்கிறது.
• இதுதவிர, மும்முடிச் சோழபுரம், சோழ கேரளபுரம், ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம், சுந்தர சோழசதுர்வேதி மங்களம் போன்ற ஊர்களின் பெயர்கள் சோழராட்சிக்கு சான்றாகும்.
• நாஞ்சில் நாட்டு வளம்- நாயக்கர்களால் பலமுறை கொள்ளையிடப்பட்டது. திப்பு சுல்தானின் படையெடுப்பையும் இப்பகுதி கண்டிருக்கிறது.
• 1729 முதல் 1949 வரை இப்பகுதி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்து வந்தது.
• 1945 இருந்து 1956 வரை குமரி மாவட்ட தமிழர்கள் போராடி, சில பகுதிகளைப் பெற்று தமிழ்நாட்டுடன் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பிறந்த கதை:
• 1949க்குப் பின்னர் திருவாங்கூர்-கொச்சி அரசின் கீழ் தமிழர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டது. ஐக்கிய கேரளத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதையும் சேர்ப்பதற்கு மலையாளிகள் முயன்றனர்.
• 1945ம் ஆண்டு முதல் மொழியை வைத்து தமிழ் பேசும்பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்.
• 1945 ஆம் ஆண்டு திருவாங்கூர் தமிழர் உரிமைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது.
• குழுவில் பி.எஸ். மணி, இரா. வேலாயுதம், கே.நாகலிங்கம், காந்திராமன், ஆர்.கே. ராம், முத்தையா, மார்க்கண்டன் ஆகியோர் முன்முயற்சியில் எஸ். நத்தானியேல் தலைமையில் அகில திருவாங்கூர்த் தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பினைத் தோற்றுவித்தனர்.
• பின்னர் திருத்தம் செய்யப்பெற்று திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
• கதவடைப்பு, கருப்புக் கொடி ஊர்வலம் என்கிற முறையில் தமிழர் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினர்.
• இந்திய விடுதலைக்கு பின்னர் திருவிதாங்கூரில் கேரள காங்கிரஸ் ஆட்சி தொடங்கியது.
• 1948 தேர்தலில் 4 வட்டங்களில் வெற்றி பெற்றனர் தமிழர். 

• பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருந்தஇந்த காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைக் கொன்றனர்.
• பலர் மீது வழக்குகள் போடப்பட்டன.
• திருவாங்கூர்-கொச்சி ராஜ்ய இணைப்பை எதிர்த்து நேசமணி போராட்டம் நடத்தினார்.
• 1954 ஆகஸ்ட் 11ம் நாள் விடுதலை நாளாக கருதப்பட்டு அறப்போராட்டங்களை நடத்தினர்.
• தொடுவட்டியிலும், மார்த்தாண்டத்திலும் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழர்கள் உயிரிழந்தனர்.
• 1955இல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி பட்டம் தாணுப்பிள்ளையின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.

தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வந்த பகுதிகள்:
• தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றங்கரை தேவிக்குளம்,பீர்மேடு, சித்தூர் வட்டங்களை தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று வேண்டுகோளை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் இந்திய அரசிடம் அளித்தனர்.
• ஆனால் இந்திய அரசோ தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் உருவானது.
• இதற்கான சட்ட வரைவு 1956 ஆம் ஆண்டு சென்னை சட்டசபையிலும், இந்திய பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.
• தமிழரின் பாரம்பரிய பகுதிகள் இழந்ததன் வாயிலாக பெரியார், சிறுவாணி, மற்றும் உள்ள ஆறுகள் தமிழக விவசாயத்திற்கு கிடைக்காமல் வீணாக அரபிக்கடலில் கலப்பதை இன்றும் காணலாம்.

கன்னியாகுமரி: மாவட்டத்தின் எல்லைகள்:
• வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டம்.
• மேற்கில் கேரளமும்; தெற்கில் இந்துமகா கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

• இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கிறது.
• இவ்வூரிலேயே காலையில் சூரியோதயத்தையும், மாலையில் மறைவையும் கண்டு களிக்கலாம்.
• சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரிய பந்து போலத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாது.
• இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான். 

• குமரித் துறையில் உள்ள கன்னியாகுமரியின் கோவில் பார்க்கத்தக்கது.
• கடல் நடுவில் உள்ள பாறைவிவேகானந்தரின் நினைவுப் பாறை என்று அழைக்கப்படுகிறது.
• 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து ஸ்ரீபாத பாறையில் அறிவு விளக்கம் பெற்று சென்றதை நினைவு கூறும் வண்ணம் இங்கு 1970 ஆம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 

• இது போலவே காந்தியண்ணலின் அஸ்தி கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வண்ணம், வட இந்திய பாணியில் இங்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
• அண்ணாவின் பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதி சூரிய ஒளி இங்குள்ள மண்டபத்தில் விழும்படி கட்டப்பட்டுள்ளது. குகநாதசாமி கோயில் பழைமையானதாகும்.
• இக்கோவிலில் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
• அடுத்து பார்க்க வேண்டியது அரசு அரும்காட்சி சாலை.
• கலங்கரை விளக்கத்திலிருந்து இயற்கை காட்சிகளையும், கடற்காட்சிகளையும் காணலாம்.

நாகர்கோவில்:
• கன்னியாகுமரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது.
• இங்குள்ள நாகராஜா கோவில் பார்க்கத்தக்கது. இதன் வாயிலின் முகப்பு சீன முறையில் அமைந்த விகாரங்கள் பெளத்த பாணியைக் காண்பிக்கிறது.
• இக்கோயிலிலுள்ள தூண்களில் சமண தீர்த்தங்கர்களான மகாவீரர், பார்சுவநாதரின் உருவங்களைக் காணலாம். 

• நாகராஜாவே முக்கிய கடவுள். இக்கோவில் முற்காலத்தில் சமணக் கோயிலாக இருந்திருக்கும் என்பது அறிஞர்கள் முடிவு.
• நாகர்கோவில் நகராட்சி 1900 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது.
• இந்நகராட்சியின் பகுதிகள் வடசேரி, வடிவீஸ்வரம், கோட்டாறு, ஒழுகினசேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
• பல கல்வி நிலையங்கள் மருத்துவமனை, போக்குவரத்திற்கும் மையமாக இருக்கின்றது.
• மாவட்டத் தலைநகரானதால் தொழில், வணிக நிலையமாகவும் விளங்கி வருகிறது.

இயற்கை வளங்கள்
கனிம வளம்:

• கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்குமே கிடைக்காத 'இல்மனைட்' மணலில் கிடைக்கிறது.
• இதிலிருந்து டிட்டானியம், ரூட்டைல், மோனசைட், சர்க்கான் போன்ற பிற கனிமங்கள் பெறப்படுகின்றன.
• இந்தக் கனிவளங்கள் மணலில் இருப்பதால் மணல் பொன்வண்ணமாக காட்சியளிக்கிறது. 

• இது தவிர பலவித வண்ண மணல்கள் கன்னியாகுமரியில் கிடைக்கின்றன.
• இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இல்மனைட்டில் 8% கன்னியாகுமரியிலிருந்து கிடைக்கிறது.
• இல்மனைட்டிலிருந்து டிட்டானியம் பிரித்தெடுக்கப்பட்டு டிட்டானியம் ஆக்ஸைடு வெடிமருந்து, வெள்ளை பெயின்ட் செய்ய பயன்படுகிறது. இதுதவிர கடைசல் வேலைக்கு டிட்டானியம் கலந்த எஃகு பயன்படுத்தப்படுகிறது. 

• வர்ணங்கள் ஒளிகுன்றாமல் இருக்கவும், ரப்பர்களில் ஏற்படும் வெடிப்புகளைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பொருள்களில் பளபளப்பு ஏற்படுத்தவும், தாள் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது.
• தமிழகத்தில்- இங்கு மட்டுமே கிடைக்கும் மோனாக்சைட்டில் 10 விழுக்காடு தோரியம் காணப்படுகிறது. இது அணுகுண்டு செய்ய பயன்படுவதால் பாதுகாக்கப்படுகிறது.

• அதிக வெப்பத்தைத் தாங்கும் சர்க்கான், பீங்கான் எஃகு தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது.
• இந்தியாவில் இத்தொழில்கள் இன்னும் பெருமளவில் வளராத காரணத்தால், இந்த வளத்தை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.
• உப்புத்தாள் தயாரிக்க உதவும் கார்னட் மணல் மண்டைக்காடு முதல் கடியபட்டினம் வரை காணப்படுகிறது. 

• கல்குரியஸ் என்னும் கடினமான பாறை வகைகள் இம்மாவட்டத்தில் பல இடங்களில் கிடைக்கின்றன.
• இது தவிர கிராபைட், சுண்ணாம்புக் கல் போன்றவையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
• இரவிப்புதூர், மருங்கூர் முதலிய ஊர்பகுதிகளில் இரும்பு கலந்த கற்களும், ஆரல்வாய் மொழியிலிருந்து வெள்ளமடம் வரை சுண்ணாம்புப் படிவங்களும் படிவுகளாக உள்ளன.

காட்டுவளம்:
• நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு மலையினை கன்னியாகுமரி மாவட்டம் பெறுகிறது.
• இதனால் இங்கு காடுகள் செழித்துக் காணப்படுகின்றன.
• காடுகளின் மொத்த பரப்பளவு 449 ச.கி.மீ. ஆகும்.
• இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4000 அடி வரை செல்கிறது.
• இங்கு யானை, மான், மிளாவு என்ற மான் வகை, சிறுத்தை, புலி, கரடி, பன்றி, உடும்பு, குரங்கு, செந்நாய், நரி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. 

• இங்கு தேக்கு, மட்டிப்பால், முன்னிலவு போன்ற மரங்கள் வளர்கின்றன.
• 800 ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரங்களும், 600 ஏக்கர் பரப்பில் தீக்குச்சி மரங்களும், 15 ஏக்கர் பரப்பில் அரக்கு உற்பத்திற்காக பூவன்மரத் தோட்டங்களும் வளர்க்கப் படுகின்றன.
• பல மருத்துவ மூலிகைகள் மருத்துவ மலையில் காணப் படுகின்றன.

வேளாண்மை:
• கன்னியாகுமரி மாவட்டத்தில் 'நாஞ்சில் நாட்டில்' மட்டுமே நெல் விளைகிறது.
• மற்ற இடங்களில் மரவள்ளிக் கிழங்கு, வாழை, சோளம், உளுந்து, பயறு, பருப்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. 

• நாஞ்சில் நாட்டில், சம்பா, வால் சிறுமுண்டதும் என்ற இருவகை நெல் வகைகள் பாரம்பரியமாக விளைவிக்கப்பட்டு வருகின்றன.
• நெல்லுக்கு அடுத்து தென்னை 40,000 ஏக்கரில் பயிராகிறது.
• கன்னியாகுமரி முதல் தேங்காய்ப் பட்டினம் வரை தென்னை வளர்க்கப்படுகிறது. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் தென்னை நாற்றுப்பண்ணை உள்ளது.
• பனைமரம்- கல்குளம், விளவங்கோடு, வட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது. 

• நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், பனை வெல்லம் போன்றவை பெறப்படுகின்றன.
• தோவாளை வட்டத்தில் ஆரல்வாய்மொழிப் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
• ஊடுபயிராக நீண்ட இழைப் பருத்தி, மலைச்சாரல்களிலும் ரப்பர் தோட்டங்களிலும் பயிராகிறது.

தொழில் வணிகம்:
• குமரி மாவட்டம் இயற்கை வளம் செறிந்தது. இந்த வளம் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
• வேளாண்மை பொருள் உற்பத்தி தொழில்களே இங்கு பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகின்றன. 

• தேசிய தொழில் வளர்ச்சிக் கழகம் இம்மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளவை என கணித்திருக்கும் தொழில்கள்: அலுமினியப் பொருட்கள், மீன் பிடிக்கும் எந்திரப் படகுகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல், ரப்பர் ஷஂட், போம் ரப்பர், லெடக்ஸ் சிமெண்ட், நார்க் கயிறு, ரொட்டி, பிஸ்கட் செய்தல், மீன் பதப்படுத்துதல். தொழில் முனைவோர் இவற்றில் இறங்கலாம்.


No comments:

Post a Comment