LATEST

Wednesday, December 18, 2019

சொல் இலக்கணம் - பகுதி 1

GET FREE TNPSC MATERIALS

சொல் இலக்கணம் - பகுதி 1

•    ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடார்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
•    பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
•    பதம் – பகுபதம் (பகுக்கவியலும் பதம்). பகாப்பதம் (பகுக்கவியலாபதம்.)
•    மொழி – தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி.
•    கிளவி – இரட்டைக்கிளவி (இரட்டைச்சொல்)
(எ.கா.) :
•    பூ, கை, தா, வா – இவை ஓரெழுத்துச் சொற்கள்.
•    மண், மாந்தர், நடந்தனர் – இவை இரண்டும் முதலாகப் பல
•    எழுத்துகள், தொடர்ந்த சொற்கள்.
சொல்லின் இலக்கண வகைகள்
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்

1. பெயர்ச்சொல்:

•    பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.

பெயர்ச்சொல் வகைகள்:
i. பொருட் பெயர்
ii. இடப் பெயர்
iii. காலப் பெயர்
iv. சினைப் பெயர்
v. பண்புப் பெயர்
vi. தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும்.

'இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே'- நன்னூல் - 275


எடுத்துக்காட்டுகள்
பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

2. வினைச்சொல்:

•    வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும்.  வினைச்சொல் இரண்டு வகைப்படும் . அவை முற்று, எச்சம் எனப்படும்.
i) முற்று:
•    முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். இவை இரண்டு வகைப்படும். அவை தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று

a) தெரிநிலை வினைமுற்று:
•    செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.
•    எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்
செய்பவன் = கயல்விழி(கருத்தா)
கருவி = நூல்
நிலம் = பூ
செயல் = தொடுத்தல்
காலம் = இறந்தகாலம்
செய்பொருள் = மாலை

b) குறிப்பு வினைமுற்று:
•    பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.
•    எ.கா: அவன் பொன்னன் = பொன்னை உடையவன் - பொருள்
அவன் விழுப்புரத்தான் = விழுப்புரத்தில் வாழ்பவன் – இடம்
அவன் சித்திரையான் = சித்திரையில் பிறந்தவன் - காலம்
அவன் கண்ணன் = கண்களை உடையவன் - சினை
அவன் நல்லன் = நல்ல இயல்புகளை உடையவன் - குணம்.
அவன் உழவன் = உழவுத் தொழில் செய்பவன் - தொழில்
•    அவன் என்னும் எழுவாய்க்கு பயனிலையாய் வந்த பொன்னன் என்பதே குறிப்புவினை ஆகும். அதாவது பொன்னை உடையவனாய் இருந்தான், இருக்கின்றான், இருப்பான் என முக்காலத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது.

ஏவல் வினைமுற்று:
•    முன்னிலையிடத்தாரை ஏவுதற் பொருளில் வரும் வினைமுற்று. இது எதிர்காலத்தை காட்டும். ஒருமை, பன்மை உணர்த்தும்.
•    செய்வாய் - ஏவல் ஒருமை
•    செல்வீர் - ஏவல் பன்மை         வினைமுற்று
•    சென்மின் - ஏவல் பன்மை

வியங்கோள் வினைமுற்று:
•     ‘க’‘இய’‘இயர்’ என்னும் விகுதிகளைப் பெற்று வரும்.
•    வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும்.
•    மூன்று இடங்களிலும், ஐம்பாலிலும் வரும்.
•    எ.கா: வாழ்க - வாழ்த்துதல்
ஒழிக - வைதல்
செல்க - விதித்தல்
வாழிய, வாழியர் - வாழ்த்துதல்
உடன்பாடும், எதிர்மறையும்:
•    அனைத்து வினைமுற்றுகளும் உடன்பாட்டு பொருளிலும், எதிர்மறைப் பொருளிலும் வரும்.
•    தொழில் நிகழ்வதை காட்டுவது – உடன்பாடு
•    தொழில் நிகழாமையைக் காட்டுவது – எதிர்மறை
உடன்பாடு எதிர்மறை
•    தெரிநிலை வினைமுற்று - தொடுத்தான் - தொடுத்திலன்
•    ஏவல் வினைமுற்று - செல்வீர் - செல்லாதீர்
•    வியங்கோள் வினைமுற்று - சொல்லுக – சொல்லற்க

ii) எச்சம்:
•    முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். இவை இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம்.

a) பெயரெச்சம்:
•    பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
•    எ.கா: நிகழ்கால பெயரெச்சம் = படிக்கின்ற கயல்விழி, செல்கின்ற கோதை
இறந்தகால பெயரெச்சம் = படித்த கயல்விழி, சென்ற கோதை
எதிர்கால பெயரெச்சம் = படிக்கும் கயல்விழி, செல்லும் கோதை

தெரிநிலை பெயரெச்சம்:
•    காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்

•    எ.கா:
படித்த மாணவன்
படிக்கின்ற மாணவன்
படிக்கும் மாணவன்
•    இத்தொடர்களில் படித்த, படிக்கின்ற, படிக்கும் என்னும் சொற்கள் பொருள் முடிவு பெறவில்லை. அவை முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திநின்று மாணவன் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ள்ன. இவ்வாறு, காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும்.

குறிப்புப் பெயரெச்சம்

•    காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
•    எ.கா:
நல்ல மாணவன்
அழகிய மலர்
•    நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும்.

b. வினையெச்சம்:
•    வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என இருவகைப்படும்.
•    எ.கா.  இறந்தகால வினையெச்சம்  படித்து வந்தான், ஓடிச் சென்றான்
நிகழ்கால வினையெச்சம்  படித்து வருகின்றான், ஓடிச் செல்கின்றான்
எதிர்கால வினையெச்சம்  படித்து வருவான், ஓடிச் செல்வான்
•    பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் என காலத்திற்கு ஏற்ப மாறும். வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா.

தெரிநிலை வினையெச்சம்

•    காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்
•    எ.கா: படித்துத் தேறினான்

குறிப்பு வினையெச்சம்
•    காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும்
•    எ.கா: மெல்ல நடந்தான்

முற்றெச்சம்:-

•    ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது.
•    எ.கா: மைதிலி வந்தனள் பாடினள்
முருகன் படித்தனன் தேறினன்


3. இடைச்சொல்:

•    இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.
•    ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யா முதலிய வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.
•    மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.
•    எ.கா:
அவன்தான் வந்தான்
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்

4. உரிச்சொல்:
•    உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
ஒரு பொருள் குறித்த பல சொல்:
•    சாலப் பேசினான்.
•    உறு புகழ்.
•    தவ உயர்ந்தன.
•    நனி தின்றான்.
•    இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன
பல பொருள் குறித்த ஒரு சொல்:
•    கடிமனை - காவல்
•    கடிவாள் - கூர்மை
•    கடி மிளகு - கரிப்பு
•    கடிமலர் - சிறப்பு
•    இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்.

No comments:

Post a Comment