LATEST

Wednesday, December 18, 2019

எழுத்து இலக்கணம் பகுதி-2

https://play.google.com/store/apps/details?id=com.edu.magmemsb&hl=en

எழுத்து இலக்கணம் பகுதி-2

5. குற்றியலுகரம் 

 (ல் + உ = லு, குறைந்து ஒலிக்கும் உகரம்)
•    குற்றியலுகரம் – குறுமை + இயல் + உகரம் (கு சு டு து பு று)

•    ஒரு மாத்திரையளவு ஒலிக்க வேண்டிய உகரம் அரை மாத்திரையளவாகக் குறைந்தொலிப்பது குற்றியலுகரமாகும். தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். இதனையே குற்றியலுகரம் என்பர்.

•    பசு – காசு படு – பாடு அது – பந்து
•    மேற்கண்ட சொற்களில் பசு, படு, அது போன்ற சொற்கள் இதழ் குவிந்து நன்கு ஒலிக்கப்படுகிறது. இங்கு கு,சு,டு,து போன்ற எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை அளவு.
•    ஆனால் காசு, பாடு, பந்து போன்ற சொற்களில் கு சு டு. து போன்ற எழுத்துக்களின் உகரம் குறைந்து ஒலிக்கப்படுகிறது. இதுவே குற்றியலுகரம் ஆகும்.
•    இங்கு கு சு டு. து ஆகிய எழுத்துக்கள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கிறது.
•    தனி ஒரு குற்றெழுத்தை அடுத்து வரும் உகரம் எழுத்துகள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கிறது. (எ.கா) அது பசு படு பொது
•    சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வரும் ‘உகரம்’ தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்காது.
•    சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லினம் மெய்களை (க்,ச்,ட் த்,ப்,ற்) ஊர்ந்து உகரம் (கு,சு,டு,து,பு,று) மட்டுமே தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.
•    சொல்லின் இறுதி எழுத்தாக நிற்கும் குற்றியலுகரத்திற்கு முன் உள்ள எழுத்தை நோக்க குற்றியலுகரம் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

குற்றியலுகரத்தின் வகைகள்:

குற்றியலுகரம் ஆறு வகைப்படும்
i) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
ii) ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
iii) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
iv) வன்தொடர்க் குற்றியலுகரம்
v) மென்தொடர்க் குற்றியலுகரம்
vi) இடைத்தொடர்க் குற்றியலுகரம்

i) நெடில் தொடர்க் குற்றியலுகரம்:
•    இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு:'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு

ii) ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்:
•    இது - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.
அஃ•து, இ•ஃது, எ•ஃது, கஃ•சு, எ•கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில் உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.

iii) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
•    இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.
அரசாட்சி= அரசு+ ஆட்சி
•    நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.

iv) வன் தொடர்க் குற்றியலுகரம்:
•    இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.

v) மென் தொடர்க் குற்றியலுகரம்:
•    இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.
சங்கு + ஊதினான் = சங்கூதினான்
•    இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன் இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.

vi) இடைத் தொடர்க் குற்றியலுகரம்:
•    இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு
•    பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்
இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும்அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்றுகுறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று.

6. குற்றியலிகரம்: (குறைந்தொலிக்கும் ‘இ’கரம்)
•    குற்றியலிகரம் – குறுமை + இயல் + இகரம். நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும்.

"யகரம் வர குறள் உதிரி இகரம் உம்
    அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய" - நன்னூல்

•    எ.கா: நாடு +  யாது = நாடியாது
கொக்கு+  யாது  = கொக்கியாது
•    மியா என்னும் அசைசொல்லில் உள்ள இகரமும், தன் (ம்+இ=மி) மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
•    எ.கா:- கேண்மியா, சென்மியா
முற்றியலுகரம்: (தனக்குரிய மாத்திரையிலிருந்து குறையாத உகரம்)
•    தனிக்குறிலை அடுத்துவரும் கு, சு, டு, து, பு, று.
•    எ.கா: பகு, குடு, தபு, பெறு, சிறு
•    காணு, உண்ணு, உருமு இவற்றில் ஈற்றிலுள்ள மெல்லின உகரங்கள் முற்றியலுகரங்கள்
•    எழு, தள்ளு, கதவு, அள்ளு, அல்லு- இவற்றில் ஈற்றிலுள்ள இடையின உகரங்கள் முற்றியலுகரங்கள் ஆகும்.
குறிப்புகள்: தனிக்குறிலை அடுத்து வரும் உகரங்கள்,ஈற்றிலுள்ள மெல்லின இடையின உகரங்கள் ஆகியவை முற்றியலுகரங்கள்

7. ஐகாரக் குறுக்கம்:
•    ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.
•    ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
•    ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும்.இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.

"தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் - நன்னூல்

எ.கா:
ஐந்து - 1 1/2 மாத்திரை
வளையல் - 1 மாத்திரை
மலை- 1 மாத்திரை

8. ஔகாரக் குறுக்கம்:
•    ஔகாரம்+குறுக்கம்= ஔகாரக் குறுக்கம். ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு

"தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்" - நன்னூல்

•    எ.கா: ஔவை
மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

9. மகரக்குறுக்கம்:
•    மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்
•    மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

"ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்" - நன்னூல்

•    எ.கா:
வரும் வண்டி
தரும் வளவன்
•    மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

"செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும்" - (தொல். 51)

பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.

10. ஆய்தக்குறுக்கம்:
•    ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும்.
•    ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.

"ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்" - நன்னூல்

•    எ.கா.: முள் + தீது = முஃடீது
மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்.

No comments:

Post a Comment