LATEST

Thursday, January 23, 2020

பேராழியியல் (Oceanography) - பேராழியின் தரை அமைப்பு

பேராழியின் தரை அமைப்பு

•    நிலமும் கடலும் சந்திக்கின்ற இடத்தில் பேராழியின் தரையானது ஆரம்பிக்கின்றது. கடலோர பகுதியானது நிலையானது அல்ல. ஒவ்வொரு அலைகள் மற்றும் ஓதங்களின் போதும் மாற்றி அமைக்கப்படுகின்றன.
•    பேராழியின் தரை அமைப்பானது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அவை.
a. கண்டத்திட்டு
b. கண்டச்சரிவு மற்றும்
c.கடல்தரை ஆகும்.
 
a. கண்டத் திட்டு (Continental Shelf):
•    கடற்கரை ஓரத்தின் ஆழம் குறைந்த பகுதியாகும். இதன் ஆழம் 100 மீட்டர்கள் ஆகும். இக்கண்டத்திட்டு பகுதியானது மிகச்சிறந்த மீன்பிடித்தளமாக விளங்குகின்றது.
•    இங்கு மீன்களின் உணவாக கடல்வாழ் நுண்ணுயிரிகள் அதிக அளவு கண்டத்திட்டு பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக, நியுபவுன்ட்லாந்தில் உள்ள கிராண்ட் பேங் (Grand Bank) மற்றும் பிரிட்டனில் உள்ள டாகர் திட்டுகளாகும்.
•    கண்டத்திட்டு பகுதிகளில் பெட்ரோலிய ஆழ்குழாய், கிணறுகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மும்பை ஹை (இந்தியா).
 
b. கண்டச்சரிவு (Continental Slope)
•    இது செங்குத்து சரிவாக பேராழியின் தரையை அடைகின்றது. கண்டச்சரிவு மற்றும் கண்டத்திட்டு பகுதிகளை கண்ட விளிம்பு (Continential Margin) என அழைக்கின்றோம். இதன் சராசரி ஆழம் 155 மீட்டர்கள் ஆகும்..
•    ஒழுங்கற்ற கடற்கரை மற்றும் ஆழமான சரிவுகள் ஆகியன இயற்கை துறைமுகம் அமைய அவசியமாகின்றது. உதராணமாக, கொச்சின் மற்றும் மும்பை துறைமுகங்கள், கண்டச் சரிவில் குறுகிய பள்ளத்தாக்கு, ஒதங்கள் சேறு வழிதல் ஆகியன காணப்படுகின்றன.
•    கடலடிக் குன்றுகளைச் சுற்றி கீழ் மட்டத்தில் ஆழ்கடல் சமவெளி (Abyssal Plain) உள்ளது. இந்த ஆழ்கடல் சமவெளி உயிரினங்களின் அழுகியக் கரிமப் பொருட்களால் மூடப்பட்டுள்ளது. நடுகடல் மலைத்தொடரானது (Ocean Ridge) கண்டத்திட்டு விசையினால் ஏற்படுகின்றன.

கடல் மலைகள்:
•    கடலின் அடிப்பகுதியில் உள்ள எரிமலையின் ஒவ்வொரு சீற்றத்தின் போது வளர்ந்து உருவாகிறது. இக்கடல் மலைகள் கடல் நீரின் மேற்பரப்பிற்கு மேல் தெரிவதை தீவு (Island) என அழைக்கிறோம். 
•    கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தீவுகள் அலை மற்றும் வானிலை செயல்களால் அரிக்கப்பட்டு கீழ்ப்பகுதிக்கு சென்றிருந்தால் அவை கயாட் (Guyot) என அழைக்கப்படுகிறது.
•    பேராழியின் அகழிகள் (Oceanic Tranches) என்பவை பேராழியின் ஆழமான பகுதியாகும். இரு கண்டத்திட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் போது அடர்த்தி குறைவான தட்டிற்குக் கீழ அடர்த்தி அதிகமான தட்டு செல்வதால் அகழிகள் உருவாகிறது.

நீர் சுழற்சி:
•    நீர் சுழற்சி என்பது நீர், நிலத்திலிருந்து வளிமண்டலத்தை அடைந்து மீண்டும் நிலத்தை அடையும் செயலாகும்.

உவர்ப்பியம்:
•    உவர்ப்பியம் என்பது கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் அளவினை குறிப்பதாகும். இதன் பொருள் பேராழியில் கரைந்துள்ள உப்பின் அளவே உவர்பியம் ஆகும்.
•    உவர்ப்பியம் என்பது ஒரு லிட்டர் நீரில் எத்தனை கிராம் அளவு உப்பு கலந்துள்ளது என்பதை குறிப்பிடுவதாகும். உலகில் உள்ள பேராழியின் சராசரி உவர்ப்பியம் 35 கிராம் ஆகும்.

பேராழியின் வெப்பநிலை:
•    பேராழியில் உள்ள உயிரினங்களின் பண்புகளை நிர்ணயிப்பதில் பேராழியின் வெப்பநிலை முக்கய பங்கு வகிக்கின்றன. கடல் நீரின் வெப்பநிலை மாறுபாடே பேராழியில் நீரோட்டங்கள் உருவாக காரணமாய் அமைகிறது. 
•    பேராழிகள் சூரிய ஆற்றலை சேமித்து வைக்கும் திறன் கொண்டுள்ளதால் புவியின் வெப்பச்சமநிலையினை சீர் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. நிலத்தின் மேற்பரப்பானது மிக விரைவாக குளிர்ச்சி அடைகிறது. ஆனால், நீர்ப் பரப்பானது மெதுவாக வெப்பமடைந்து மெதுவாகவே குளிர்ச்சி அடைகிறது. இவ்வாறான நிலம் மற்றும் நீரின் வெப்பநிலை வேறுபட்டால் புவியின் மேற்பரப்பில் உள்ள பேராழி மற்றும் கண்டங்களில் பல்வேறு வகையான காலநிலை காணப்படுகின்றது.
•    பேராழியின் மேற்பரப்பு வெப்ப நிலையினை பல்வேறு காரணிகள் கட்டுப்படுத்துகின்றன. அவைகள் அட்சரேகைகள், பேராழி நீரோட்டங்கள், நிலவும் காற்றுகள் மற்றும் வானிலை ஆகியனவாகும்.

No comments:

Post a Comment