LATEST

Wednesday, May 26, 2021

திருக்குறள் விளக்கஉரை, கதைகள்: அதிகாரம் 1. கடவுள் வாழ்த்து குறள் 1

 

அதிகாரம்: 1   கடவுள் வாழ்த்து குறள்: 1

பால்:           அறத்துப்பால் (Araththuppaal)

இயல்:          பாயிரவியல் (Paayiraviyal)

அதிகாரம்:       கடவுள் வாழ்த்து (The Praise of God)

குறள்:

 அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு

 

மு.வரதராஜனார் விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் விளக்கம்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

 

Kural 1

A, as its first of letters, every speech maintains;


The “Primal Deity” is first through all the world’s domains.

 

Explanation

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.

 

திருக்குறள் கதை:

முதல்வன் கணேசபிள்ளை நாவலடிக் கிராமத்தில் வாழும் பெரும் பணக்காரர். அவரின் மனைவி சகுந்தலா. தனது குடும்பத்தவர்களின் மனம் மட்டுமல்ல, மற்றவாகளின் மனங்கள் கூடக் கோணாதபடி நடந்துகொள்ளும் உத்தமி. கணேசபிள்ளையின் ஏகபுத்திரன் கஜமுகன். திருமணமாகிப் பல வருடங்கள் பிள்ளையில்லாதிருந்த கணேசபிள்ளை நாவலர் ஸ்ரீ வித்தியா மஹா கணபதியின் ஆலயத்தில் நோன்பிருந்து பெற்ற மகன் கஜமுகன். கஜமுகனை கணேசபிள்ளை பாசத்துடன் வளர்த்து வந்தார். 

அவனுக்கு பத்து வயதான போது காய்ச்சல் நோய் அவனைப் பீடித்தது. பெரும் பணக்காரரான கணேசபிள்ளை நகரில் உள்ள பிரபல வைத்தியர்களிடமெல்லாம்; கஜமுகனைக் கொண்டு சென்றார். ஆனால் நோய் குணமாவதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டிருந்தது. பட்டணத்தில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனையில் கஜமுகன் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

 

அதைவிடப் பெரிய மருத்துவமனை அந்நாட்டில் இல்லை. அம்மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர்களாலும் கஜமுகனது நோயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கணேசபிள்ளை ஆடிப்போனார். அவரால் செயற்பட முடியவில்லை. கஜமுகன் நோய்வாய்ப்பட்ட நாளில் இருந்து நாவலர் ஸ்ரீ வித்தியா மஹா கணபதி ஆலயத்தில் தினமும் அவனின் நலன்வேண்டி பூசை செய்வித்தார்.

 

தினமும் கோயிலில் அன்னதானம் செய்தார். ஏழைகளுக்கு உதவினார். இருந்தும் கஜமுகனுக்கு நோய் குணமாகவில்லை. கணேசபிள்ளையாலும் சகுந்தலாவாலும் எதையும் சிந்திக்க்கூட முடியவில்லை. கணேசபிள்ளைக்கு உலகத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டது. வாழ்க்கையின் மீது வெறுப்பேற்பட்டது. தற்கொலை செய்ய எண்ணினார். தான் தற்கொலை செய்து கொண்டால் உணர்வில்லாமல் இருக்கும் கஜமுகனையும், உருக்குலைந்திருக்கும் தனது மனைவியையும் கவனிக்க யாரும் இல்லாது போய்விடுவார்கள் என்று எண்ணி அந்த யோசனையைக் கைவிட்டார். அவரால் இயங்க முடியவில்லை.

 

நாவலர் ஸ்ரீ வித்தியா மஹா கணபதி ஆலய மண்டபத்தில் தங்கியிருந்து மக்களுக்கு தொண்டாற்றுபவர் ஸ்ரீனிவாசன். திருமணமாகாதவர். பெரும்பாலான நேரங்களில் நிஷ்டையில் இருப்பார். மக்கள் தமது குறைநிறைகளை அவரிடம் சொல்லி ஆறுதலடைவார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களில் சிலருக்கு பின்பு

 

நடைபெறவுள்ள நிகழ்வுகளைப் பற்றிக் கூறுவார். அருளுரைகள் கூறுவார். கோயிலுக்குச் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிக் கூறுவார். அதனால் துன்பம் நேர்ந்த மக்கள் அவரிடம் செல்வார்கள். அவராக எதுவும் கூறினால் சரி. அவரிடம் எதையும் கேட்க முடியாது. யாருடனும் அவர் பேசமாட்டார்.

கணேசபிள்ளை மகன் சுகவீனமடைந்த பின்பு பலமுறை சுவாமியாரின் அருகில் சென்று இருந்தும் அவர் எதுவும் கூறவில்லை. சகுந்தலாவும் பலமுறை சுவாமியாரிடம் சென்றாள். அவனுக்கும் அவர் எதுவும் கூறவில்லை. அதனால் கணேசபிள்ளையும் சகுந்தலாவும் நம்பிக்கை இழந்துவிட்டனர். அன்று மஹா கணபதி ஆலயப் பூசை முடிந்ததும் ஸ்ரீனிவாசன் கோயிலின் மேற்குத் திசையாகச் செல்லும் வீதியால் நடக்கத் தொடங்கினார். 

அவருடன் வாழும் வீமன் என்ற நாய் அவருக்கு முன்னே சென்றது. சுவாமியார் செல்வதைக் கண்ட மக்கள் அவரின் பின்னால் சென்றனர். ஸ்ரீனிவாசன் கணேசபிள்ளையின் வீட்டுக்குச் சென்றார். அவரைக் கண்ட கணேசபிள்ளை பரபரப்புடன் ஓடிவந்தார். சுவாமியாரை ஆசனத்தில் இருத்தினார். வீமன் அவரது காலடியில் சென்று படுத்தது. மக்கள் பலர் முற்றத்தில் குழுமி நின்றனர்.

எமக்கெல்லாம் கடவுளே முதல்வனாவார். எழுத்துக்கள் யாவும் அகரத்தை முதலாய் உடையன போல உலகம் கடவுளை முதல்வனாய் உடையது. அரசின் ஆணைப்படி மக்கள் நடக்கிறார்கள். அரசன் இறைவனின் ஆணைப்படி நடக்கிறான். உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இதில் கோழி முந்தியதா? முட்டை முந்தியதா? பெற்றோர் முந்தியவர்களா? பிள்ளைகள் முந்தியவர்களா? மரம் முந்தியதா? வித்து முந்தியதா? என்ற கேள்விக்கு இடமில்லை. ஏனென்றால் கோழியையும் முட்டையையும் பெற்றோரையும் பிள்ளையையும் மரத்தையும் வித்தையும் படைத்தவன் இறைவன்.

நாம் எமது விருப்பு வெறுப்புகளுக்கிணங்க நடக்க முடியாது. விருப்பு வெறுப்பில்லாத இறைவனின் சித்தப்படியே நடக்கிறோம். திடகாத்திரமான ஒருவன் நூறு வருடம் வாழ்வேன் என நினைத்துக் கொள்கிறான். ஆனால் திடீரென நிகழும் விபத்தால் அவன் மறுநாளே இறக்கலாம். நாளை என்ன நடைபெறும் என எதிர்வுகூற முடியாது. நிம்மதியாகப் படுத்துறங்கிய ஆயிரக் கணக்கானோர் நிலநடுக்கம் போன்ற கொடிய அழிவுகளால் மறுநாள் தூக்கத்தில் இருந்து எழவில்லையென நாம் செய்தி ஊடகங்கள் மூலம் அறிகிறோம். பலரும் நம்பாத பல விடயங்கள் தினந்தோறும் உலகில் நடந்துகொண்டிருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் காரணமானவன் இறைவன். இறைவனை நம்பியவனுக்கு இடர் வராது. இறுதி வரையும் நம்பிக்கையோடு வாழ்பவன் வெற்றியடைவான். திறமை, அறிவு,

நுட்பம், அதிஷ்டம், உயர்வு, தாழ்வு யாவும் இறைவனால் நமக்கு வழங்கப்பட்டவை. இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தையும் இறைவனால் தான் அழிக்க முடியும். கணேசபிள்ளைக்கு உண்டான கஷ்டகாலம் கழிந்துவிட்டது. இனி மகிழ்ச்சி தான்” என்றார் சுவாமிகள். மக்கள் “அரோகரா” என்றனர். 

கணேசபிள்ளையின் தகப்பனார் பட்டணத்தில் இருந்த வைத்தியசாலையில் இருந்து அவசரமாக வந்து சொன்னார்; “பேரன் பிழைச்சிட்டான். எழும்பியிருந்து கதைக்கிறான்…” கணேசபிள்ளைக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

No comments:

Post a Comment