Monday, May 3, 2021

வ.உ.சிதம்பரனாரின் குறள் முகம்

 

வ.உ.சிதம்பரனாரின் குறள் முகம்


·         வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய திருக்குறள் உரை வெகு பிரசித்தம். அதை வெளியிடுவதற்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அரங்கேற்றியுமிருக்கிறார். திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் இரு கண்களாகக் கருதி வ.உ.சி. போற்றியிருக்கிறார்; இரண்டையும் கற்றுத்தேர்ந்து, அதன் உரைகளின் இயல்புகளை மதிப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்.

·         வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவரைச் சந்திக்கவந்த நண்பர் சுவாமி வள்ளிநாயகத்திடம், “தமிழர்கள் எல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1,330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லைஎன்றிருக்கிறார். திருக்குறள் மீது வ.உ.சி. கொண்டிருந்த அளவுகடந்த பெருமதிப்புக்கு இந்த வரிகள் ஓர் உதாரணம்.

·         இந்தப் பெரும் பற்றின் காரணமாகத்தான் ப.ஜீவானந்தம், திருக்குறள் பித்தர் என்று வ.உ.சி.யை அன்பு பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

·         திருக்குறள் அன்பர் என்று வ.உ.சி. தன்னைத் தானே அழைத்து மகிழ்ந்துகொண்ட நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது. வள்ளுவத்துக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு உயிரும் உடலுமானதாக இருந்தது.

 

திருக்குறள் உரை

·         திருக்குறள் உரைகளிலேயே மணக்குடவர் உரை வ.உ.சி.யை வெகுவாகக் கவர்ந்தது.

·         அதனால், மணக்குடவர் உரைச் சுவடியை முதன்முதலாக அச்சிட்டு மகிழ்ந்தார்.

·         அறத்துப்பாலை மட்டும் கொண்ட முதல் பகுதியை 1917-ல் வெளியிட்டார்.

·         வ.உ.சி. பதிப்புத் துறையில் ஈடுபட்டுப் பதிப்பித்த நூல்களுள் திருக்குறள் மணக்குடவர் உரை மிக முக்கியமானதாகும்.

·         பரிமேலழகர் உரை பல இடங்களில் பிழையாயுள்ளது என்றும், முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் இயற்றியன அல்ல என்றும் வ.உ.சி. தமக்கு இயற்கையாயுள்ள ஆவேசத்தோடு பேசியிருக்கிறார்.

 

தனித்துவமான வ.உ.சி. உரை

·         திருக்குறள் முழுவதற்கும் உரையெழுத வேண்டும் என்று வ.உ.சி. திட்டமிட்டு, அறத்துப்பால் உரைப் பகுதியை முதலாவதாக 1935-ல் வெளியிட்டிருக்கிறார்.

·         திருக்குறளுக்குரிய நவீனகால உரைகளுள் வ.உ.சி.யின் உரை தனித்து நோக்கத்தக்கதாகும்.

·         இந்த உரைப் பதிப்பில் காகிதம், மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியம்என்று பதிவுசெய்து தம் சுதேசிய உணர்வைப் பறைசாற்றிப் பெருமை கொண்டிருக்கிறார் வ.உ.சி.

·         திருக்குறளின் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் (இப்படி அமைப்பது வ.உ.சி. வழக்கு) மூன்று பகுதிகளையும் ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று அவர் விரும்பியபோதும், பக்க மிகுதியைக் கருத்தில்கொண்டு அறப்பால் பகுதியை மட்டும் முதலில் வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி வெளிவந்த அடுத்த ஆண்டு அதாவது 1936-ல் வ.உ.சி. காலமாகிவிட்டதால் ஏனைய பகுதிகள் வெளிவராமல்போயின. குறளின் ஏனைய இரு பகுதிகளுக்கும் வ.உ.சி. உரை எழுதினாரா, இல்லையா?’ என்ற ஐயமும் பலருக்கு இருந்துவந்த நிலையில், பேராசிரியர் மா.ரா.அரசு எழுதிய வ.உ.சிதம்பரனார்என்ற நூலில் (2005) பொருட்பால், இன்பப்பால் பகுதிக்குமான வ.உ.சி.யின் உரை இருப்பது குறித்து எழுதினார்.

 

எல்லோருக்குமான வள்ளுவர்

·         வ.உ.சி. திருக்குறள் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையல்ல என்றும், அவை திருவள்ளுவர் காலத்துக்குப் பிற்காலமும் முந்தைய உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்காலமுமாகிய இடைக்காலப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை என்றும் முடிவு செய்கிறார்.

No comments:

Post a Comment