Wednesday, May 5, 2021

மெய்ப்பாடு மற்றும் அதன் வகைகள்

 மெய்ப்பாடு மற்றும் அதன் வகைகள்


இது அகப்பாட்டு உறுப்புகளில் ஒன்பதாவதாக இடம் பெறுவது. மெய்ப்பாடு என்னும் சொல்லுக்குப் பொருட்பாடு, வெளிப்பாடு, புலப்பாடு எனப் பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. மெய் என்பது உடலைக் குறிக்கும்.

 

உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்பாக உடலில் புலப்படுவது உண்டு. பேச்சே இல்லாமல் உடல் வழியான புலப்பாட்டில் மட்டுமே கருத்துகளை உணர்த்தமுடியும். இதையே மெய்ப்பாடு என்று வகுத்தனர்.

 

இம் மெய்ப்பாடு நகை, அழுகை, இளிவரல் (இழிவு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம் (வீரம்), உவகை, வெகுளி (கோபம்) என்று எட்டு வகைப்படும். இவ் எட்டு உணர்ச்சிகளையும் உடல் வழியாகவே உணர்த்துதல் மெய்ப்பாடு ஆகிறது. இம் மெய்ப்பாடு அகப்பாடல்களில் கூற்று நிகழ்த்தும் தலைமக்களுக்குப் பெரிதும் பயன்தருவது.


நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.


இந்த எட்டுவகை மெய்ப்பாடுகள் எவ்வெவ்வாறான வழிகளில் வெளிப்பட்டுத் தோன்றும் என காண்போம்.


1.நகை:- இது எள்ளல், இளமை, பேதமை, மடன் எனும் நான்கின்வழி தோன்றும்.


2.அழுகை:- இது இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின்வழி தோன்றும்.


3.இளிவரல்:- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கின்வழி தோன்றும்.


4.மருட்கை:- இது புதுமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்வழி தோன்றும்.


5.அச்சம்:- அணங்கு, விலங்கு, கள்வர், இறை எனும் நான்கின்வழி தோன்றும்.


6.பெருமிதம்:- இது கல்வி, தறுகண், இசைமை கொண்ட இவை நான்கின்வழி தோன்றும்.


7.வெகுளி:- உறுப்பறை, குடிகோள், அலை, கொலை எனும் நான்கின்வழி தோன்றும்.


8.உவகை:- செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கின்வழி தோன்றும்.


உள்ளத்து உணர்ச்சிகளை உற்றுநோக்கியும் உணர்ந்துபர்த்தும் கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும் மனநுட்பமும் நம்மை வியக்கச் செய்கிறன்றன. இத்தகைய நுட்பமான உணர்வுகள் இயற்கையிலேயே அமையப் பெற்ற தமிழ் மக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.


No comments:

Post a Comment