LATEST

Thursday, December 19, 2019

தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள் (முழுத்தொகுப்பு) - பகுதி 1

Magme Guru

தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள்

தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள் 
1. தொல்பொருள் சான்றுகள், 
2. இலக்கியச் சான்றுகள், 
3. அயல் நாட்டவர் சான்றுகள் 
என மூன்று தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன.
 
அடிப்படைச் சான்றுகள் 
 
•    தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
•    சங்க இலக்கியங்களில் இச்சொல் (தமிழகம்) மொழியையும் நாட்டையும், நாட்டில் வாழ்ந்த மக்களையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
•    இதுவே தமிழ்நாடு, தமிழ் கூறும் நல்லுலகம் எனப் பழைய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது
•    பழந்தமிழகத்தின் வரலாறானது பண்டைய எகிப்து, பாபிலோனியா, சுமேரியா, உரோம், கிரீஸ் ஆகிய நாடுகளின் வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது என்பது உண்மை.
•    நமக்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சான்றுகளே இதனை உறுதிப்படுத்துகின்றன.
•    பழங்காலத்தில், பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் வராலாற்று நிகழ்ச்சிகளை ஏடுகளில் எழுதிவைக்கும் வழக்கத்தை மக்கள் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
•    பழங்காலத் தமிழர்கள் தங்கள் வரலாற்றினைக் குறித்து வைக்க வில்லையே தவிர, அவர்களுடைய வாழ்க்கை முறைகளை அறிய உதவும் புதைபொருட் சின்னங்கள், இலக்கியக் குறிப்புகள் ஆகியவை மிகுதியாகவே நமக்குக் கிடைத்துள்ளன.
•    தமிழகத்தில் பல சிறந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. இது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. இவற்றில் தமிழகத்தை ஆண்ட மன்னரைப் பற்றியும், அரசியல், பழக்க வழக்கங்கள் குறித்தும் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
•    இவையேயன்றி அயல்நாட்டு அறிஞர் பெருமக்கள் தென் இந்தியா பற்றியும் பழந்தமிழர் வரலாறு பற்றியும், பண்பாடு, நாகரிகம் பற்றியும் விரிவாகக் குறித்து வைத்துள்ளனர்.
•    தமிழகத்தில் கோயில்களிலும் குகைகளிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், வரையப்பட்டுள்ள ஓவியங்களும் அவ்வக்காலத்து மக்களின் வரலாற்றைக் கூறும்வண்ணம் அமைந்துள்ளன.
 
தொல்பொருள் சான்றுகள்
 
தமிழ்நாட்டு வரலாற்றை அறிய விழையும் மாணவர்களுக்குப் புதைபொருள் சான்றுகளும், நினைவுச் சின்னங்களும் பயன்படுகின்றன.
•    நைல், யூப்ரடீஸ், டைகிரிஸ் ஆகிய நதிக்கரைகளில் நடத்திய அகழ்வாராய்ச்சிகளைப் பயன்படுத்தித் தமிழ் நாட்டிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
•    அண்மைக் காலத்தில் கற்கால மனிதர்களைப் பற்றிய பல நினைவுச் சின்னங்கள் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூரிலும், புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டிலும், தமிழ் நாட்டின் பிற இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
•    அக்காலத்து மக்களின் நாகரிகத்தை அறிய அந்நினைவுச் சின்னங்கள் பயன்படுகின்றன.

•    தொல்பொருள் சான்றுகளை மூன்றாகப் பிரித்து ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். அவையாவன:
1. கல்வெட்டுகளும் பட்டயங்களும்
2. நினைவுச் சின்னங்கள்
3. நாணயங்கள்

கல்வெட்டுகளும் பட்டயங்களும் 

 •    கல்வெட்டுகளும் பட்டயங்களும் (செப்பேடுகள்) தமிழ் நாட்டு வரலாற்றைப் பற்றிய பயன்தரும் உண்மைகளை அளிக்கின்றன.
•    காலத்திற்கு ஏற்றவாறு கல்வெட்டுகளில் பயன்படுத்தியிருக்கும் எழுத்துகளும் மொழிகளும் மாறுபடுகின்றன. கல்வெட்டுகள் தோன்றிய துவக்கத்தில் அவை தமிழ் மொழியில் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டன.
•    பல்லவர் காலத்தின் முதல் கட்டத்தில் பிராகிருத மொழியிலும், இடைப்பகுதியில் சமஸ்கிருத மொழியிலும், கடைசிக் கட்டத்தில் கிரந்தத் தமிழிலும் வெளியிடப்பட்டன.
•    துறவிகள் வாழ்ந்து வந்த குகைச்சுவர்கள், கற்பாறைகள், நடுகற்கள், கோயில் சுவர்கள், கோயில் தூண்கள்.
•    சிற்பங்களின் அடித்தளங்கள், செப்பேடுகள் முதலியவை செய்திகளைப் பொறிக்கும் தளங்களாயின.
•    குகைக் கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் பரவலாக உள்ளன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், ஆனை மலை, அழகர் மலை போன்ற மலைகளில் உள்ள குகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.
•    கல்வெட்டுகளும், செப்பேடுகளும்  சமய அறப்பணிகள், கோயில்களுக்கு வழங்கிய நன்கொடைகள், மன்னர்களின் வெற்றிகள், வழக்குகள் மீது வழங்கிய தீர்ப்புகள், ஊர் மன்றங்கள் இயற்றிய சட்டங்கள், அவற்றின் செயல்கள், வாணிபம் போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றன.
•    பண்டைய தமிழர்கள், போரில் விழுப்புண்பட்டு மாண்ட வீரர்களுக்காக நட்ட நடுகற்களில் நாம் வரலாற்றுச் செய்திகளைக் காண்கிறோம்.
•    போரில் பகைவர் பலரைக் கொன்று வீரத்தை நிலைநாட்டி, விழுப்புண்பட்டு இறந்துபோன மறவரின் பெயரை ஒரு கல்லில் பொறித்து, அக்கல்லை நட்டு, அந்நடுகல்லுக்கு மயில் பீலி சூட்டிச் சிறப்புச் செய்தனர் என்பதைப் புறநானூறு,
அணிமயில் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
இனி நட்டனரே கல்லும்
(புறநானூறு, 264: 3-4) எனக் கூறுகிறது.

•    தொல்காப்பியத்திலும் நடுகல் பற்றிச் சான்று கிடைக்கிறது. சங்க காலத்தைச் சார்ந்த நடுகற்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
•    தற்போது கிடைத்துள்ள பெரும்பாலான நடுகற்கள் பல்லவர்களின் காலத்தைச் சார்ந்தனவாகும். செங்கம் நடுகற்கள் பல்லவர் வரலாற்றிற்குச் சான்று பகர்கின்றன.
•    பல்லவர்கள் காலத்துச் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் பல்லவப் பேரரசின் பரப்பு, அப்பேரரசை ஆண்ட மன்னர்களின் வெற்றிகள், அறப்பணிகள் முதலிய உண்மைகளை உணர்த்துகின்றன.
•    பாண்டியர் வரலாற்றைக் காட்டும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பல கிடைத்துள்ளன. 
•    அவற்றுள் வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடு, சிவகாசிச் செப்பேடு, குடுமியான்மலைக் கல்வெட்டு முதலியவை குறிப்பிடத்தக்கவையாம்.
•    பிற்காலச் சோழர்கள் வரலாற்றில் நாம் அடியெடுத்து வைக்கும்போது கல்வெட்டுச் சான்றுகள் நமக்குத் தீபம் போன்று பயன்படுகின்றன.
•    திருவாலங்காட்டுச் செப்பேடு அரசியல் பற்றிய முக்கியமான தகவல்களைத் தந்துள்ளது. சோழர் ஆடசியில் கிராமங்களில் ஊராட்சிமுறை நிலவிய காரணத்தால் மக்கள் சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்ததை உத்திரமேரூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
•    திருவிடை மருதூர்க் கல்வெட்டு வரிகொடுக்கத் தவறினோருக்கு வழங்கிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. திருவேண்டிபுரம் கல்வெட்டு, அன்பில் செப்பேடு, கரந்தைச் செப்பேடு, கன்னியாகுமரிக் கல்வெட்டு என்பன பிற முக்கிய கல்வெட்டுகளாகும்.
•    சோழர் எழுப்பிய கோயில்களின் சுவர்களில் அணிகலன்கள் போன்று காட்சி தரும் கல்வெட்டுகள் வரலாற்று உண்மைகள் பலவற்றைக் கொண்டுள்ளன.
 
நினைவுச் சின்னங்கள் 
 
•    பல்லவர், சோழர், மதுரை நாயக்கர் ஆகியோர் எழுப்பிய கோயிலகள் தத்தம் காலத்துக் கட்டடக் கலை வளர்ச்சியையும் பண்பாட்டு வளர்ச்சியையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
•    அவற்றுள் பல்லவர் எழுப்பிய மகாபலிபுரத்துக் கடற்கரைக் கோயில், காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயில், சோழர்கள் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரக் கோயில், தாராசுரம் கோயில், நாயக்கர் எழுப்பிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதலியவை சிறப்புற்று விளங்குகின்றன.
•    தமிழ் நாட்டில் காணப்படும் பெரும்பாலான கோயில்களில் கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
•    வரலாற்று உண்மைகளை வழங்கும் சிற்பங்களும் உள்ளன.
 
நாணயங்கள் 
 
•    நாணயங்கள் வெவ்வேறு காலங்களில் நிலவிய பேரரசுகளின் பொருளாதார நிலையையும், ஆதிக்கத்தையும் எடுத்து இயம்புவதுடன் சரியான கருத்துகளை வழங்குகின்ற காரணத்தால் அவற்றை இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பிட்டும் கூறுவர்.
•    சங்க கால வரலாற்றுக்கு நாணயங்கள் பெரிதும் உதவி புரிகின்றன.
•    அவை சங்க இலக்கியச் செய்திகள் பலவற்றையும் மெய்ப்பிக்கின்றன. ஆனால் அந்நாணயங்களில் பெரும்பான்மையானவை அந்நிய நாட்டு நாணயங்கள் ஆகும்.
•    அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்த ரோமாபுரி நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
•    இவை ரோமாபுரிக்கும் தமிழகத்திற்கும் இடையே நடைபெற்று வந்த செழிபபான வாணிபத்தைப் புலப்படுத்துகின்றன.
•    ‘Periplus of the Erithraean sea’ என்னும் கிரேக்க நூலின் வாயிலாக இவ்வாணிபத்தைப் பற்றி அறிய முடிகிறது.
•    பழம் பாண்டிய மன்னரின் நாணயங்கள் சில சதுர வடிவிலும், நீண்ட சதுர வடிவிலும் கிடைத்துள்ளன.
•    இவற்றின் ஒருபுறம் மீன் சின்னமும், மறுபுறம் யானை போன்ற விலங்கின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன.
•    இவை கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
•    பல்லவர்களும் பாண்டியர்களும் சிறந்த செப்பு நாணயங்களை வெளியிடுவதில் சிறப்புப் பெற்று விளங்கினர்.
•    அக்காலத்துத் தமிழகத்தின் பொருளாதார நிலையையும், அரசுகளுக்கிடையில் ஏற்பட்டிருந்த நல்லுறவையும் அறிவதற்கு இந்நாணயங்கள் பயன்படுகின்றன.


இலக்கியச் சான்றுகள்

இலக்கியத்தைப் படைக்கின்ற ஆசிரியர்கள் தாங்கள் இயற்றும் இலக்கியங்களில் தங்கள் கருத்தை வெளிக் கொண்டு வரும்போது அவற்றுடன் தமது காலத்துக்கு முன் நிகழ்ந்த நிகழ்சசிகளையும், தமது காலத்தில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நன்கு அறிந்து எழுதுகிறார்கள். இவ்வகையான இலக்கியங்கள் ஒரு நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளைச் சுட்டுவதால் இலக்கியங்கள் இன்றையளவும் தமிழக வரலாற்றை அறிய உதவும் முக்கியச் சான்றுகளாக விளங்குகின்றன.
தமிழக வரலாற்றுக்கான இலக்கியச் சான்றுகளை நாம் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம். அவையாவன:
1. தமிழ் இலக்கியச் சான்றுகள்
2. பிற இந்திய மொழி இலக்கியச் சான்றுகள்
 

தமிழ் இலக்கியச் சான்றுகள் 

•    பொதுவாகச் சங்க காலத்தைப் பற்றி இன்றும் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும் நாம் இங்குக் கி.பி. முதலாம், இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளைச் சங்க காலமாகக் கருதலாம்.
•    இச்சங்க காலத்தை மூன்றாவது சங்க காலம் என்பர். அதாவது கடைச் சங்க காலம் எனலாம். இதற்கு முன்னர் முதல் இரண்டு சங்கங்கள் இருந்ததாக முன்னரே படித்திருக்கிறோம்.
•    தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இரண்டாவது சங்க காலத்தில் எழுந்த நூல் என்பது பல அறிஞர்களின் கருத்து.
•    இந்நூலில் தமிழ்ச் சமுதாயத்தை விளக்கும்வண்ணம் எண்ணற்ற கருத்துகள் காணப்படுகின்றன.
சான்று:
ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே

(தொல்காப்பியம்-பொருள்-அகத்திணையியல்-23)
(ஆயர்-முல்லை நில மக்கள் பெயர் வேட்டுவர்-குறிஞ்சி நில மக்கள் பெயர் ஆடுஉ-ஆண்; கிழவர்-தலைவர்.)
சங்க காலத்தில் எழுந்த பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் அக்கால அரசியல், சமுதாய, பொருளாதார வரலாறுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
 

பிற இந்திய மொழி இலக்கியச் சான்றுகள் 

•    இராமாயணம், மகாபாரதம் ஆகிய வடமொழிக் காப்பியங்களில் தமிழகத்தைப் பற்றியும், தமிழக மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
•    அயோத்தியில் தசரதன் கூட்டிய அரசர்கள் பேரவையில் பாண்டிய மன்னன் ஒருவன் வந்திருநதான் என வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.
•    பாரதப் போரில் பாண்டவர்களைச் சேர, சோழ, பாண்டிய வீரர்கள் ஆதரித்ததாக வியாசரின் பாரதம் குறிப்பிடுகிறது.
•    மகேந்திரவர்மன் வடமொழியில் எழுதிய மத்த விலாசப் பிரசகனம் என்னும் நூலில் பௌத்தரும, சமணரும பின்பற்றிய பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
•    முஸ்லீம் படையெடுப்பாளர்கள் தமிழர்களைத் துன்புறுத்திய செயல் கங்கா தேவி தெலுங்கு மொழியில் இயற்றிய மதுராவிஜயம் என்னும் நூலில் உணர்த்தப்படுகிறது.
•    நவாபுகளின் ஆட்சிக் காலத்தில் அரபு, உருது ஆகிய மொழிகளில் தோன்றிய இலக்கியங்கள் அக்காலத் தமிழக மன்னர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளன.
 

அயல் நாட்டவர் சான்றுகள் 

அயல்நாட்டவர் சான்றுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. அயலவர் குறிப்புகள்
2. ஐரோப்பியர் கால ஆவணங்கள்
 

அயலவர் குறிப்புகள்
 
•    தமிழர்களைப் பற்றி அயல் நாட்டவர் கூறுவன அயலவர் குறிப்புகள் எனப்படும். பெரும்பாலும் அயல் நாட்டைச் சேர்ந்த கல்வியில் சிறந்தோர் குறிப்பிடுவதாகும்.
•    கி.மு. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்கர் தாம் இயற்றிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார்.
•    பெரிபு;ஸ் என்ற நூலிலும், ரோம ஆசிரியர்களான ஸ்டிராபோ, பிளினி, தாலமி ஆகியோரின் நூல்களிலும் சங்க காலத் தமிழகத்தின் நகரங்கள், துறைமுகப்பட்டினங்கள் பற்றியும், அயல் நாட்டு வாணிபம் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன.  


ஐரோப்பியர் கால ஆவணங்கள்
 
•    வாஸ்கோடகாமாவின் வருகையின் விளைவாக இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம் ஆகியவற்றில் புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றின.
•    கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் வாணிகத்தின் பொருட்டும் கிறித்துவ சமயத்தைப் பரப்பும் பொருட்டும் இந்தியாவிற்கு வந்தனர்.
•    இவர்கள் வாணிகத் தளங்களையும் சமய இருப்பிடங்களையும் அமைத்துக் கொண்டு தத்தம் பணிகளைத் தொடங்கினர்.
•    இவ்வாணிகர்களும், கிறிஸ்தவப் பாதிரியார்களும் தங்கள் தாய் நாடுகளுக்கு எழுதிய கடிதங்களும் குறிப்புகளும் அக்காலத்துத் தமிழக அரசியல் பண்பாட்டு நிலைகளைப் பற்றித் தெளிவுபடுத்துகின்றன.
•    கி.பி. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது.
•    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைப் பற்றி அறிய அவர்களது ஆவணங்கள், அவர்கள் இயற்றிய சட்டங்கள், தாய்நாட்டு மன்னர்களுடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள், கடிதப் போக்குவரத்துகள் முதலியவை பயன்படுகின்றன.
•    ஐரோப்பியர் ஆட்சிக் காலத்து ஆவணங்களும், அதற்குப் பின்னர் தோன்றிய ஆவணங்களும் சென்னை ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
•    இராமநாதபுரம் இராஜாக்கள், சிவகங்கை இராஜாக்கள் ஆகியோரது ஆவணக் காப்பகங்கள், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், கொடைக்கானல் இயேசு சபை ஆவணக்காப்பகம், திருச்சிராப்பள்ளி, வேலூர், நாகர்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள கிறிஸ்துவ சமய அலுவலகங்கள் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தமிழ் நாட்டு வரலாற்று உண்மைகளைக் கொண்டுள்ளன.
•    தற்காலத்தில் எழுந்த உரைநடை இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள் ஆகியவை தமிழக மக்களது சமுதாயம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment