தமிழக அயலகத் தொடர்புகள் - பகுதி 1
• தமிழர்கள் மேலை நாட்டாருக்கு என்னென்ன பொருள்களை ஏற்றுமதி செய்தனர் என்றும், என்னென்ன பொருள்களை இறக்குமதி செய்தனர் என்றும் இப்பாடம் விளக்குகிறது.
• மேல் நாட்டாருடன் மட்டுமன்றிக் கீழை நாட்டாருடனும் வாணிபத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர் என்றும், தமிழகத்தின் வடபகுதியில் உள்ள வடஇந்தியருடனும் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் விளக்குகிறது.
• இத்தகைய தொடர்பால் என்னென்ன மாற்றங்கள் சமயம், மொழி, பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்பட்டிருக்கின்றன என்பது பற்றி எல்லாம் மிகவும் விரிவாக விளக்குகிறது.
பண்டைய தமிழரின் அயலகத் தொடர்புகள்
• பண்டைய தமிழர் வாழ்விற்கு இன்றியமையாதது பொருள் என்று கருதினர்.
• உயிர் வாழ்வதற்குத் தேவையான கூறுகளாக உள்நாட்டுப் பொருள்களையும், அயல்நாட்டுப் பொருள்களையும் கருதலாயினர்.
• அத்தகைய பொருள்களைப் பெறச் சோம்பல் இல்லாமல் கடுமையாக உழைத்து வளம் சேர்த்தனர்.
இம்முயற்சியின் ஒரு கூறாக,
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
(கொன்றை வேந்தன், 39)
என்ற முதுமொழிக்கு ஏற்பக் கடல் கடந்த நாடுகளுடன் வாணிபம் செய்து பொருள் ஈட்டினர்.
பழந்தமிழர்கள் மலைகளுடனும், காடுகளுடனும், கடலுடனும் கலந்து உறவாடினார்கள். இவர்கள் பண்டைக் காலத்திலேயே அயல்நாடுகள் பலவற்றுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். இதற்கான சான்றுகளை அயல்நாட்டுக் குறிப்புகளைக் கொண்டும், நம்முடைய பழைய இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.
அயல்நாட்டுக் குறிப்புகள்
• பழந்தமிழர்கள் மேற்கே கிரீஸ் (கிரேக்கம்), ரோமாபுரி, எகிப்து முதல் கிழக்கே சீனா வரையில் கடலோடிப் பிழைத்தார்கள்.
• இந்நாடுகள் மட்டுமின்றிப் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற மேலை நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
• மேலும் வடஇந்திய நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
• தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்கு ஆசிய நாடுகளில் மிகுந்த தேவை ஏற்பட்டது.
• இதனைக் கருத்தில் கொண்ட பழந்தமிழர்கள் இவை போன்ற பொருள்களை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
இலவங்கம்
• யூதர்களின் ஆதி சமயத் தலைவர் மோசஸ் என்பவர், தாம் நிகழ்த்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது கி.மு. 1490இல் என்பர்.
• தென் அரேபியா நாட்டு அரசி ஷோபா , இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் என்பவனைக் காணச் சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது.
• சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர்.சாலமனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மயில் தோகை, அகில் மரங்கள், யானைத் தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற குறிப்பும் அறியப்படுகிறது. மேலே குறிப்பிட்ட சான்றுகளால் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் மேலை நாட்டாரோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறியலாம்.
பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள்
• கிரேக்கம், ரோமாபுரி ஆகிய நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த வாணிகர், தொழிலாளர் முதலானோரை யவனர்என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
• கிரேக்கர்கள் தங்கள் நாட்டையும், மொழியையும் அயோனெஸ் என்று கூறிக் கொள்வராம். அதுவே தமிழில் யவனர் எனத் திரிந்தது என்பர்.
• ஆனால் அச்சொல் கிரேக்கர்களையும், ரோமர்களையும் ஒரு சேரக் குறிப்பதாக வழங்குகிறது.
• யவனர்களோடு வாணிபம் செய்த தமிழர்கள் அவர்களுடைய நாடுகளிலிருந்து தங்கத்தையும், மதுவையும் இறக்குமதி செய்தனர். தங்கத்தின் விலைப்பொருட்டாக மிளகினை ஏற்றுமதி செய்தனர்.
• யவனர்கள் வாணிகர்களாக மட்டுமன்றி, தமிழக மன்னர்களின் அரண்மனையில் கைவினைக் கம்மியராகவும் (கம்மியர்- உலோக வேலை செய்பவர்), காவல்காரராகவும் பணிபுரிந்துள்ளனர்.
• தமிழகத்தில் உள்ள பெரிய துறைமுகப்பட்டினங்களில் யவனர்களுக்குத் தனி இருப்பிடங்கள் இருந்தன. இவை போன்ற குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.
பொன்னொடு வந்து மிளகொடு மீளுதல்
முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி (அகநானூறு, 149:9-11)
(நன்கலம் ஸ்ரீ நல்ல கப்பல்; கறி ஸ்ரீ மிளகு)
மதுவை இறக்குமதி செய்தல்
யவனர்கள் நல்ல மரக்கலங்களில் கொண்டுவந்த குளிர்ச்சி பொருந்திய நறுமணமிக்க மதுவை, ஒளி பொருந்திய வளையல்கள் அணிந்த இளம்பெண்டிர், பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களில் ஊற்றித் தர, அவ்வினிய மதுவை நாள்தோறும் பருகி மாறன் என்னும் பாண்டிய அரசன் களிப்புடனும், அமைதியுடனும் வாழ்ந்தான் எனப் புறநானூறு கூறுகின்றது.
யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற
(புறநானூறு, 56: 18-21)
(தேறல் ஸ்ரீ மது; ஒண்தொடி ஸ்ரீ ஒளி பொருந்திய வளையல் மடுப்ப ஸ்ரீ ஊற்றித் தர)
கைவினைக் கம்மியர்
யவனர்கள் செய்த நல்ல வேலைப்பாடு அமைந்த பாவை தனது கையில் ஏந்தியிருக்கும் அழகிய அகன்ற விளக்கு நிறையும்படி எண்ணெய் ஊற்றினர் என நெடுநல்வாடை கூறுகிறது.
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்து ஐ அகல் நிறைய நெய்சொரிந்து
(நெடுநல் வாடை: 101-102)
(ஐ ஸ்ரீ அழகிய் நெய் ஸ்ரீ எண்ணெய்)
காவல்காரர்கள்
யவனர்கள் பாண்டிய மன்னனின் அரண்மனையில் காவல் மிக்க கோட்டை வாசலைக் கொலைவாள் ஏந்திக் காவல் காத்து நின்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்
(சிலம்பு, ஊர்காண் காதை: 65-66)
யவனர் இருக்கை
• பண்டைய தமிழகத்தில் கீழைக் கடற்கரையில் அமைந்திருந்த பெரிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். இங்கு அயல்நாட்டு வாணிகம் செழித்திருந்துத.
• இப்பட்டினத்தில் கடற்கரையை ஒட்டி யவனர்களுக்கு என்று ஒரு தனி இருப்பிடம் இருந்தது. அது காண்போரை மேற்செல்ல விடாமல் தடுக்கும் அளவிற்கு அழகுடையதாக விளங்கியது எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
காண்போரைத் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கை
(சிலம்பு, இந்திர விழவூரெடுத்த காதை: 9-10)
(இருக்கை ஸ்ரீ இருப்பிடம், சேரி)
இனி மேலை நாட்டாருடனும், கீழை நாட்டாருடனும் கொண்ட கடல்வழி வாணிபத் தொடர்பு பற்றியும், வட இந்தியருடன் கொண்ட கடல் மற்றும் தரைவழி வாணிபத் தொடர்பு பற்றியும் விரிவாகக் காண்போம்.
மேலை நாட்டாருடன் வாணிபத் தொடர்பு
• தமிழகத்துக்கு மேற்கே அமைந்துள்ள நாடுகளைப் பொதுவாக மேலை நாடு என்பதுண்டு.
• அம்மேலை நாடுகளுடன் பழந்தமிழர்கள் நன்கு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதைப் பல இலக்கியங்கள் வாயிலாகக் காணமுடிகிறது.
எகிப்து
• தமிழகத்திற்கும் எகிப்திற்குமிடையே ஏற்பட்டிருந்த வாணிபத் தொடர்பு மிகப் பழைமையானதாகும்.
• பல நூ ற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எரித்திரியக் கடலின் பெரிப்;ஸ் (Pநசipடரள ழக வாந நுசiவாசயநயn ளுநய) என்னும் நூலை டபிள்யூ.எச்.ஸ்காபி என்பவர் பதிப்பித்துள்ளார்.
• அவர் அந்நூலின் பதிப்புரையில் கிரேக்க மக்கள் அநாகரிகத்தினின்று விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்துக்கும் பண்டைய இந்திய நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு இருந்தது என்றும், பாரசீக வளைகுடாவின் வடக்கே இரு நாடுகளும் ஒன்றோடு ஒன்று பண்ட மாற்றத்தைச் செய்து கொண்டன என்றும் குறிப்பிடுகின்றார்.
• பண்டைய தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பண்டங்களுள் சிறப்பானவை மஸ்லின் துணியும், ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களுமாம்.
• தமிழக வணிகர்கள் இச்சரக்குகளை மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவிற்கு இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர்.
• பினீpயர் அல்லது அரேபியர் அச்சரக்குகளைத் தம்வசம் ஏற்றுக் கொண்டு எகிப்துக்கு எடுத்துச் சென்றனர்.
• எகிப்தின் பதினேழாம் அரச பரம்பரையினர் காலத்தில் (கி.மு. 1500-1350) அந்நாட்டில் இறக்குமதியான சரக்குகள் பல தந்தத்தினால் கடையப்பட்டவை என அறிகின்றோம்.
• இவை தென் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதியாயிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
கிரேக்கம்
• கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிபத்தில் இறங்கியது சுமார் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எனலாம்.
• எவ்வாறு எனில் முதன்முதலில், ஹிப்பாலஸ் (ர்ippயடழள) என்னும் கிரேக்கர், பண்டைய தமிழகத்தின் மேற்கே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மாதங்களில் காற்று வீசுகிறது எனக் கண்டறிந்தார்.
• இதுவே தென்மேற்குப் பருவக்காற்று ஆகும். இதனைச் சாதகம் ஆக்கிக் கிரேக்கர்கள் பெரிய பெரிய மரக்கலங்களைத் தமிழகத்தின் மேலைக் கரைக்குச் செலுத்தி நங்கூரம் பாய்ச்சினர் என்று ஒரு குறிப்பு உணர்த்துகிறது. பெரிப்ளுஸ் என்னும் ரோம நூலில், அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் சரக்குகளை ஏற்றி வந்த நாவாய்கள் அதாவது மரக்கலங்கள் முசிறியில் நிறையக் கிடந்ததாக ஒரு குறிப்புக் காணப்படுகின்றது.
• இவ்வாறு பண்டைய தமிழர்கள் கிரேக்கர்களுடன் கொண்ட வாணிபத் தொடர்பால், தமிழ்ச்சொற்கள் பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம் பெறலாயின.
• சொபோகிளிஸ், அரிஸ்டோ பேனீஸ் போன்ற கிரேக்க அறிஞர்களின் நூல்களில் இச்சொற்களைக் காண முடிகிறது.
• அரிசி என்னும் தமிழ்ச்சொல் அரிஸா எனவும், இஞ்சி அல்லது இஞ்சிவேர் என்னும் தமிழ்ச் சொல் ஜிஞ்ஜிபேராஸ் எனவும், இலவங்கத்தைக் குறிக்கும் கருவா என்னும் தமிழ்ச்சொல் கர்ப்பியன் எனவும் உருமாற்றம் அடைந்து கிரேக்க மொழியில் நுழைந்து வழங்கின.
• கிரேக்க வாணிகர்கள் இப்பொருள்களுடன் அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் தமிழகத்திலிருந்து கொண்டு சென்று கிரேக்க நாட்டில் பயன்படுத்தினார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
ரோமாபுரி
• தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையையும் ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்து கொண்டனர்.
• எனினும் கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையில் ரோமரின் வாணிபம் பெரும் அளவு விரிவடையவில்லை.
• அகஸ்டஸ் ஆட்சியில்தான் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு ஏற்படலாயிற்று.
• இவர் கி.மு. 30இல் எகிப்தை வென்று அதன்மேல் தமது ஆட்சியை நிலை நாட்டினார்.
• இவ்வெற்றி அவருக்கு எதிர்பாராத நற்பலனையும் தந்தது.
• அது யாதெனில் அவருக்குத் தமிழகத்துடன் முதன்முதலாக நேரடியான வாணிபத் தொடர்பு ஏற்பட்டதே ஆகும்.
• அதனையடுத்துத் தமிழகத்துக்கும் ரோமாபுரிக்கும் இடையிலான கடல் வாணிபம் பெருமளவுக்கு ஓங்கி வளரலாயிற்று.
• ரோமாபுரிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றபின் ரோமரின் வாணிபம் தமிழகத்தில் மட்டுமின்றி மசூலிப்பட்டினம், ஒரிஸ்ஸா கடற்கரையிலும் பரவலாயிற்று.
• ரோமாபுரியுடன் தொடர்ந்து தமிழகம் கடல் வாணிபத்தில் தொடர்பு கொண்டிருந்ததால் ரோமாபுரி வாணிகர்கள் தமிழகத்திலேயே தங்கிக் குடியேறிவிட்டார்கள்.
• தமிழகத்திற்கு வாணிபம் செய்ய வந்த கிரேக்கரும், யூதரும், சிரியரும் ரோமர்கள் குடியேறி வாழ்ந்த இடங்களில் அவர்களோடு இணைந்து வாழ்ந்து வந்தார்கள்.
• அவ்வாறு வாழ்ந்து வந்த அவர்களிடமிருந்தே தமிழகத்தினைப் பற்றிய செய்திகளைத் தாம் கேட்டறிந்ததாகப் பிளினி கூறுகின்றார்.
• வாணிபம் விரிவடைய விரிவடையத் தமிழகத்திலே குடியேறிவிட்ட ரோமர்களின் தொகையும் வளர்ந்து வந்தது. அதனால் அவர்களுடைய சேரி ஒன்று மதுரை மாநகருடன் இணைந்து இருந்ததாகத் தெரிகிறது.
• அக்காலத்தில் வாழ்ந்தவர்களிடையே புழக்கத்தில் இருந்த பொன், வெள்ளி நாணயங்களும், செப்புக் காசுகளும் இப்போது நமக்கு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன.
• கி.பி. 324 முதல் கி.பி. 337 வரை கான்ஸ்டன்டைன் என்னும் பேரரசன் ரோமாபுரியை ஆண்டு வந்தான். இவன் தனது இறுதிக் காலத்தில் இந்தியத் தூதுவர் ஒருவரைத் தன் அரசவைக்கு வரவழைத்தான் என்ற குறிப்பு ரோமாபுரி வரலாற்றில் இருக்கின்றது என்பர்.
பாபிலோனியா
• தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்கும் இடையே கடல் வாணிபம் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
• பாபிலோனியாவில் நிப்பூர் என்னும் இடத்தில் முரஷீ என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த காசு வாணிபத்தில் கணக்குப் பதியப்பட்ட களிமண் தகடுகள் சிலவற்றில் பாபிலோனியர் தமிழக வாணிகருடன் கொண்டிருந்த பற்று வரவுகள் குறிக்கப்பட்டுள்ளன.
• அதே காலத்தில் தமிழ் வாணிகர்கள் பாபிலோன் நகரத்தில் குடியேறி அங்கேயே தங்கித் தம் தொழிலை நடத்தி வந்ததற்கும் இத்தகடுகள் சான்று பகர்கின்றன.
• கீழை நாட்டாருடன் வாணிபத் தொடர்பு பண்டைய தமிழர்கள் மேலை நாட்டாருடன் மட்டும் கடல் வாணிபம் கொண்டிருக்கவில்லை.
• கீழை நாடுகளான சீனம், மலேசியா, ஜாவா, வட போர்னியா போன்ற நாடுகளுடனும் கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர்.
சீனம்
• சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்பு மிகவும் பழைமையானதாகும்.
• இத்தொடர்பு கி.மு. 1000 ஆண்டளவில் தொடங்கியிருக்கலாம் என்பர்.
• தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன.
• சீனத்துப் பட்டாடைகளையும், சருக்கரையையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது.
• இதனால் இன்றளவும் பட்டுக்குச் சீனம் என்றும், சர்க்கரைக்குச் சீனி என்றும் தமிழில் பெயர் வழங்கி வருகின்றது.
• மேலும் தமிழில் பல பொருள்களைக் குறிக்கும் சொற்கள் சீனம் என்ற பெயரோடு சேர்ந்து வழங்குவதை இன்றையளவும் நம்மால் காணமுடிகிறது.
சான்று:
சீனாக் களிமண்
சீனப் பட்டாடை
சீனாக் கற்கண்டு
சீனாச் சரக்கு
சீனாக் கிழங்கு
சீனாப் பூண்டு
இச்சான்றுகள் மூலம் தமிழகம் சீனாவுடன் வாணிபத் தொடர்பு கொண்டுள்ளது நன்கு தெரிய வருகிறது.
• பண்டைய தமிழகமும் சீனாவும் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் எச்சங்களாகத் தமிழகத்தில் கிடைத்த சீன நாணயங்கள் விளங்குகின்றன என்றால் மிகையாகாது.
• சீன தேசத்து இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன.
• கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது.
• மேலும் பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக் குன்னம் என்ற ஊரிலும், மன்னார்குடி வட்டத்திலுள்ள தாலிக்கோட்டை என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன.
• இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.
• பண்டைய தமிழகமும் சீனாவும் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் எச்சங்களாகத் தமிழகத்தில் கிடைத்த சீன நாணயங்கள் விளங்குகின்றன என்றால் மிகையாகாது.
• சீன தேசத்து இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன.
• கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது.
• மேலும் பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக் குன்னம் என்ற ஊரிலும், மன்னார்குடி வட்டத்திலுள்ள தாலிக்கோட்டை என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன.
• இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.
No comments:
Post a Comment