LATEST

Thursday, January 30, 2020

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை பகுதி 3

கல்வி

•    சங்க காலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர். கல்வி எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது.
•    கல்வி கற்பவன் மன்னனாகவும் இருக்கலாம் அல்லது எளிய குடியில் பிறந்தவனாகவும் இருக்கலாம். எந்த ஒரு கட்டுப்பாடும் அக்காலத்தில் காணப்படவில்லை.
•    எக்குலத்தவரும் கல்வி பயிலலாம். ஒவ்வோர் ஊரிலும் கல்வி கற்பிக்கும் கணக்காயர் என்பவர்கள் இருந்தனர்.
•    ஊர்தோறும் கல்வி கற்பிக்கும் கணக்காயர் இருக்க வேண்டிய இன்றியமையாமையைத் திரிகடுகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

கணக்காயர் இல்லாத ஊரும்.... ...... ....
நன்மை பயத்தல் இல் (திரிகடுகம், 10) 
 
(கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் இருத்தல் ஒருவனுக்கு எவ்வித நன்மையும் தருவது இல்லை. கணக்காயர்-ஆசிரியர் பயத்தல்-தருதல்; இல்- இல்லை).
•    கல்வி பயிற்றுவிக்கப்படும் இடம் பள்ளி எனப்பட்டது. பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று வந்தன.
•    கல்வி பயிலும்போது மாணவர்கள் ஓலையின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.
•    மாணவர்கள் கல்வி பயிலும்போது இரந்துண்ணும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது என அறிகின்றோம்.
 
இரந்தூண் நிரம்பா மேனியொடு (குறுந்தொகை, 33:3)
 
(இரந்து பெறும் உணவினால் நன்கு வளராத மேனியோடு. மேனி-உடம்பு.)
•    மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் பயின்றனர். அக்காலத்தில் கபிலர், பரணர், நக்கீரர் போன்ற பெரும்புலவர் பலர் வாழ்ந்து வந்தனர்.
•    மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைபாடினியம் ஆகிய இலக்கண நூல்களைப் பயின்றதாகத் தெரிகிறது.
•    ஏரம்பம் என்ற ஒரு கணித நூல் பழந்தமிழகத்தில் வழங்கி வந்தது. அதனை மாணாக்கர் பயின்றனர். இவ்வாறாகக் கல்வி நல்ல நிலையில் இருந்து வந்தது.

கலை

•    பண்டைய காலத்தில் கலைகளில் ஓவியம், இசை, கூத்து, நாடகம் ஆகியவை மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்ததாகத் தெரிகிறது. ஓவியத்திற்கு என்று ஒரு நூல் வழக்கில் இருந்ததாகவும் கூறுவர். சுவர்களின் மேல் வண்ண ஓவியங்கள் தீட்டியிருந்தனர்.
•    எளிதில் அழிந்து போகக் கூடிய வண்ணங்களை ஓவியர்கள் பயன்படுத்தியிருந்தனர்.
•    இசை, நாடகம், நாட்டியம், கூத்து ஆகிய கலைகளின் வளர்ச்சியைப் பற்றிய விளக்கங்களை சிலப்பதிகார அரங்கேற்று காதையில் விரிவாகக் காணலாம்.
•    ஆண்களும், பெண்களும் கூத்திலும், இசையிலும் மேம்பட்டிருந்தனர்.
•    மன்னன் முன்பு தம் கலையாற்றலைக் காட்டிப் பெரும் பரிசில்களைப் பெற்று வந்தனர் பழந்தமிழ் மக்கள்.
•    கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி என்பான் நடனத்தில் ஈடு இணையற்று விளங்கினான்.
•    நாட்டியம், கூத்து ஆகிய கலைகளைப் பற்றிய பல விரிவான நூல்கள் அக்காலத்தில் தமிழில் இருந்தன.
•    அவை அனைத்தும் காலப்போக்கில் அழிந்து விட்டன.
•    அரங்கின் முன்பு மூன்று வகையான திரைகள் தொங்கவிடப்பட்டன.
•    திரையை எழினி என்று குறிப்பிட்டனர்.
•    கூத்தில் பதினொரு வகை இருந்ததாகத் தெரிகிறது.
•    அவையாவன: கடையம், மரக்கால், குடை, துடி, அல்லியம், மல், குடம், பேடு, பாவை, கொடுகொட்டி, பாண்டரங்கம் என்பன.
•    இவ்வாறாகச் சங்க காலத்தில் கலை நன்கு வளர்ச்சியுற்றிருந்தது.

No comments:

Post a Comment