LATEST

Thursday, January 30, 2020

சங்க கால மன்னர்கள் - களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

 களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்

•    இம்மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் ஆவான்.
•    இவன் முடிசூட்டுகின்ற காலத்தில் அரசமுடியும், கண்ணியும் காணாமல் போனதால் களங்காய்களால் ஆன கண்ணியையும், நாரால் பின்னப்பட்ட முடியையும் அணிந்து கொண்டான்.
•    ஆதலால் இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் எனப்பட்டான்.
•    நார்முடிச் சேரல் பல வெற்றிகளைக் கொண்டவன் ஆவான்.
•    கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இரு இடங்களில் நடைபெற்ற போரில் நன்னன் என்ற மன்னனை வென்று அவனிடம் தான் முன்பு இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டான்.
•    இதனை அகநானூறு,
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம் பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்து (அகநானூறு, 199: 19-23)
 
என்று குறிப்பிடுவது காணலாம்.
(செரு = போர் பொருது = போர் செய்து; களத்து = போர்க்களத்து ஒழிய= மடிய; கொற்றம் = வெற்றி; வாய் வாள் = கூரிய வாள்;இழந்த நாடு = பூழி நாடு; தந்து = பெற்று.)
•    மேலும் நார்முடிச் சேரல் அதியமான் நெடுமான் அஞ்சியின் குலத்தில் தோன்றிய நெடுமிடல் என்பவனை யானைப் படை கொண்டு வென்று அவனது நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட செய்தி பதிற்றுப்பத்தில் சிறப்பாகப் பேசப்படுகிறது.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

•    இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் தம்பி ஆவான்.
•    நறவு என்னும் கடற்கரை நகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆட்சி புரிந்தவன் ஆவான்.
•    ஒரு சமயம் தமிழகத்து வட எல்லைக்கு அப்பால் உள்ள தண்டகாரணியம் என்ற காட்டில் வாழும் கொள்ளையர்கள் தமிழகத்துள் புகுந்து அங்கே உள்ளவர்களுக்கு உரிய ஆட்டு மந்தைகளைக் கவர்ந்து சென்றனர்.
•    இதனை அறிந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டகாரணியம் படை எடுத்துச் சென்று கொள்ளையரோடு போரிட்டு வென்று ஆட்டு மந்தைகளை மீட்டுக் கொணர்ந்தான் ஆதலால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான்.

No comments:

Post a Comment