LATEST

Thursday, January 30, 2020

சங்க கால மன்னர்கள் - பல்யானைச் செல்கெழுகுட்டுவன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

பல்யானைச் செல்கெழுகுட்டுவன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்

•    இம்மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் உடன் பிறந்தவன் ஆவான்.
•    இவனது காலத்தில் யானைப்படை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது.
•    இவன் யானைகள் மிகுந்திருந்த உம்பற்காட்டை வென்று தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான் என்று கூறுவர்.
•    பல வெற்றிமேல் வெற்றி கண்ட பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சிறந்த கொடையாளியாகவும் இருந்தான்.
•    ஒரு சமயம் பாலைக் கௌதமனார் என்ற புலவர் வேண்ட, பத்துப் பெரு வேள்விகள் செய்தான்.
•    இருபத்தைந்து ஆண்டுகள் நாட்டை ஆண்டபின் காட்டிற்குச் சென்று கடுந்தவம் மேற்கொண்டான் என்று பதிற்றுப்பத்துப் பதிகம் கூறுகிறது.
நெடும்பார தாயனார் முந்துறக் காடு போந்த
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
(பதிற்றுப்பத்து, பதிகம் - 3: 10-11)

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

•    இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் ஆவான்.
•    ஒரு சமயம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவையில் இருக்கும்போது ஒரு நிமித்திகன் வந்து அவனிடம் உன் இளைய மகன் இளங்கோவே ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு உரிய தகுதி உடையவன் என்று கூறினான்.
•    அதைக் கேட்ட இளங்கோவடிகள் மூத்தோன் இருக்க இளையோன் அரசனாதல் அறம் இல்லை என்று கூறிக் குணவாயில் கோட்டம் புகுந்து தவக்கோலம் பூண்டார்.
•    பின்பு முறைப்படி செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்தான் என்று கூறுவர்.
•    கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பல வெற்றிகளைப் பெற்றான். கடலிடையே வாழ்ந்த கொள்ளையர்களாகிய கடம்பர்களை வென்று, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த காரணத்தால் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் எனக் கூறப்பெற்றான்.
•    மோகூர்ப் பழையனை வென்று தன் நண்பன் அறுகைக்கு நேர்ந்த இழிவைப் போக்கினான். நேரிவாயில்என்னுமிடத்தில் தன்னை எதிர்த்து வந்த ஒன்பது மன்னர்களை வெற்றி கொண்டான்.
•    இவ்வாறு இவன் பெற்ற வெற்றிகள் பலப்பல. ஆயினும் அவை எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்த வெற்றிகள் இரண்டு.
•    ஒன்று, இவனின் தாய் இறந்தவுடன் அவளது படிமத்தைக் கங்கையில் நீராட்டச் சென்றபோது அவனை எதிர்த்த வட இந்திய மன்னர்களை வெற்றி கொண்டதாகும்.
•    மற்றொன்று, கண்ணகிக்காகச் சிலை செய்ய வேண்டிக் கல் கொணர இமயம் சென்றபோது, எதிர்த்த கனக விசயர் என்ற மன்னரை வென்று, அவரது தலை மீது கல்லை ஏற்றித் தமிழகம் கொண்டு வந்ததாகும்.
•    இச்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் கட்டி விழா எடுத்து, அவ்விழாவிற்கு இலங்கை வேந்தன் கயவாகுவை அழைத்துச் சிறப்பித்தான்.
•    இதன் மூலம் இம்மன்னனின் காலம் கயவாகுவின் காலமாகிய கி.பி. 177-199 என்பது தெரிய வருகிறது.

No comments:

Post a Comment