LATEST

Thursday, January 30, 2020

சங்க கால மன்னர்கள் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

•    சேர மன்னர்களுள் சிறந்தோனாகிய செங்குட்டுவனையும், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளையும் பெற்றெடுத்த பெருமைக்குரிய பேரரசன் ஆவான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
•    இம்மன்னன் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் எனவும், குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனவும் அழைக்கப் பெற்றவன் ஆவான்.
•    இவன் உதியன் நெடுஞ்சேரலாதனின் மைந்தன் ஆவான்.
•    இவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி நற்சோணை என்பவள் ஆவாள். இரண்டாவது மனைவி வேள்விக் கோமான் பதுமனின் மகள் ஆவாள்.
•    நற்சோணையின் வயிற்றில் தோன்றியவர்கள் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும் ஆவர். செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் (பதிற்றுப்பத்து, பதிகம் - 5ஆம் பத்து: 2-3)

என்று பதிற்றுப்பத்துப் பதிகத்தில் குறிக்கப்படுவது காணலாம்.
•    நெடுஞ்சேரலாதன், இமயமும் குமரியும் இருபால் எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்தான்.
•    பெரும்படையுடன் வடநாடு சென்று ஆரிய அரசர்களை வென்று அவ்வெற்றிக்கு அறிகுறியாக இமயமலை மீது தன் அரசின் அடையாளமாகிய வில்லினைப் பொறித்து மீண்டான் என்பது வரலாறு.
•    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெற்ற மற்றொரு பெரிய வெற்றி கடற்கொள்ளையர் கடம்பரை வென்றதாகும்.
•    இவன் ஆட்சிக் காலத்தில் கடம்பர் என்பார் மேலைக் கடலில் ஒரு தீவில் வாழ்ந்திருந்தனர் என்றும், அவர்கள் அத்தீவு வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடித்தனர் என்றும் கூறுவர்.
•    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கப்பல் படையுடன் சென்று அவர்களை வென்று அவர்களுடைய காவல் மரமாகிய கடம்ப மரத்தினை வெட்டி அதில் வீரமுரசம் செய்தான் என்பதை அகநானூறு குறிப்பிடுகிறது.
•    நெடுஞ்சேரலாதன் ஆன்றோர்களை ஆதரித்தான்.
•    இம்மன்னன் தனக்கு வரும் திறையினைப் பரிசிலர்க்கும், புலவர்க்கும் வாரி வழங்கிய வள்ளல் ஆவான்.
•    இவன் தன்னைப் புகழ்ந்து பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவருக்கு, தன் ஆட்சிக்கு உட்பட்ட உம்பற்காடு என்னும் பகுதியில் உள்ள ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டிலிருந்து வரும் வருவாயில் ஒரு பாகத்தையும் கொடுத்தான்.
•    இவன் ஐம்பத்து எட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். இச்செய்திகளைப் பதிற்றுப்பத்தில் உள்ள இரண்டாம் பத்திற்கு அமைந்த பதிகம் குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment