திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் 02
பொன்முடியார்
கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப – நூல்முறையான்
வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்
கோதமனார்
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று
நத்தத்தனார்
ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் – போயொருத்தர்
வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்
முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்
ஆசிரியர் நல்லந்துவனார்
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்
கீரந்தையார்
தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் – எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
தெய்வத் திருவள் ளுவர்
சிறுமேதாவியார்
வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்
எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை
நல்கூர் வேள்வியார்
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்
மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்கு அச்சு
தொடித்தலை விழுத்தண்டினார்
அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள்
No comments:
Post a Comment