LATEST

Friday, April 17, 2020

திருவள்ளுவமாலை பகுதி 02

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் 01

அசரீரி

        திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
        உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க
        உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
        ஒருக்கஓ என்றதுஓர் சொல்

நாமகள்

        நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
        பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
        எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
        வள்ளுவன் வாயதுஎன் வாக்கு

இறையனார்

        என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
        நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
        செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
        மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்

உக்கிரப் பெருவழுதியார்


        நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
        தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
        வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
        சிந்திக்க கேட்க செவி

கபிலர்

        தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட
        பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
        வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
        வெள்ளைக் குறட்பா விரி

பரணர்

        மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
        ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்
        வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
        உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

நக்கீரர்

        தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
        ஆனா அறம்முதலா அந்நான்கும் – ஏனோர்க்கு
        ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
        வாழிஉலகு என்ஆற்றும் மற்று

மாமூலனார்

        அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
        திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
        வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
        கொள்ளார் அறிவுடையார்

கல்லாடர்

        ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
        அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
        எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
        முப்பால் மொழிந்த மொழி

சீத்தலைச் சாத்தனார்

        மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
        மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்
        தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
        பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்

மருத்துவன் தாமோதரனார்

        சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
        மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் – காந்தி
        மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
        தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு

நாகன் தேவனார்
        தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
        வேளாது ஒழிதல் வியப்பன்று – வாளாதாம்
        அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்
        முப்பால் மொழிமூழ்கு வார்

அரிசில்கிழார்

        பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
        தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய
        சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
        வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்

 

No comments:

Post a Comment