LATEST

Friday, April 17, 2020

திருவள்ளுவமாலை பகுதி 07

திருக்குறளைப் பகுத்துக் காட்டும் பாடல்கள் 06

குலபதி நயனார்

        உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
        தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் – வள்ளுவனார்
        வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
        கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு

தேனிக்குடிக் கீரனார்

        பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
        மெயப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்
        தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
        வையத்து வாழ்வார் மனத்து

கொடிஞாழல் மாணிபூதனார்

        அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
        திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் – மறன்எறிந்த
        வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
        கேளா தனவெல்லாம் கேட்டு

கவுணியனார்
        சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
        வந்த இருவினைக்கு மாமருந்து – முந்திய
        நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
        பன்னிய இன்குறள்வெண் பா

மதுரைப் பாலாசிரியனார்

        வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
        பொள்என நீக்கும் புறஇருளை – தெள்ளிய
        வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
        உள்இருள் நீக்கும் ஒளி

ஆலங்குடி வங்கனார்

        வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
        தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்
        உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
        வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து

இடைக்காடர்

        கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
        குறுகத் தறித்த குறள்

ஔவையார்

        அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
        குறுகத் தறித்த குறள்

No comments:

Post a Comment