திருக்குறள் - அன்புடைமை - குறள் 73 & 74 - பொருளும்
விளக்கமும்
குறள் 73: அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு
பொருள்: உடம்போடு உயிர் இணைந்து இருப்பதைப் போல, வாழ்க்கை நெறியோடு அன்பு
இணைந்து இருக்கிறது.
மு.வ விளக்க உரை: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை: பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்
கலைஞர் விளக்க உரை: உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்
______________________________________
குறள் 74: அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
பொருள்: அன்பு விருப்பத்தைத் தரும்.
விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பொரும்சிறப்பைத் தரும்.
மு.வ விளக்க உரை: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்
சாலமன் பாப்பையா விளக்க உரை: குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்
கலைஞர் விளக்க உரை: அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்
No comments:
Post a Comment