LATEST

Thursday, January 30, 2020

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை பகுதி 4

சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை பகுதி 4

விளையாட்டு

             குழந்தைகள் தெருக்களில் மணல் வீடு கட்டி விளையாடினர். தேர் உருட்டி விளையாடினர்.
             இளைஞர்கள் ஏறு தழுவி விளையாடினர்.
             பெண்கள் மணற்பாவை வனைந்து விளையாடினர் கழங்குகளைக் கொண்டு அம்மானை ஆடி வந்தனர் ஊஞ்சல் கட்டி ஆடியும் வந்தனர்.
             மேலே கூறப்பட்ட பல பிரிவின் கீழ் நாம் சங்க காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி நன்றாகக் கற்றுணர்ந்தோம்.

கடவுளும் சமயமும்

             தமிழகத்தில் தமிழருக்கு முன்பு வாழ்ந்திருந்த ஆதிகுடிமக்களின் கடவுள் கொள்கைகளும், தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளும், ஆரியரின் சமயக் கொள்கைகளும் ஒன்று கலந்து சங்க காலத்து மக்கள் சமுதாயத்தில் இடம் பெற்றிருந்தன.
             தமிழர் உயிர் துறந்த வீரர்களுக்கு வீரக்கல் நட்டு வணங்கினர்.
             அக்கல் நடுகல் எனப்பட்டது.
  அந்நடுகல்லுக்கு மலர்மாலை அணிவித்து மயிற்பீலி சூட்டிச் சிறப்புச் செய்தனர். 

அணிமயில் பீலி சூட்டிப் பெயர் பொறித்து

இனி நட்டனரே கல்லும் (புறநானூறு, 264:3-4) 

     பழந்தமிழர் பேய், பூதம் போன்றவைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க

(பதிற்றுப்பத்து, 13:15) 

  மேலும் தெய்வம் மரத்தின் அடியில் தங்கியிருந்தது என நம்பினர்.

கடவுள் மரத்தமுள் மிடை குடம்பைச் (அகநானூறு. 270-12) 

   பழந்தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கடவுளர் உண்டு என எண்ணி அவர்களை வழிபட்டனர்.
குறிஞ்சி நில மக்கள் சேயோனையும், முல்லை நில மக்கள் மாயோனையும், மருத நில மக்கள் வேந்தனையும், நெய்தல் நில மக்கள் வருணனையும், பாலை நில மக்கள் கொற்றவையையும் கடவுளராக வழிபட்டனர்.
    ஆரியர்கள் பல வேள்விகளை அரசனின் உதவியுடன் செய்தனர்.
  பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்திருந்தவன்.
      அம்மன்னன் அந்தணருக்குப் பல வேள்விச் சாலைகளை அமைத்துக் கொடுத்தான்.
   ஆதலால் இவனுக்குப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயர் வந்தது.
    கடவுளை நம்பிவந்த சங்க காலத்தில் ஊழையும், கடவுளையும் பொய்யெனக் கருதியவர்களும் வாழ்ந்து வந்தனர். கடவுள் என்ற சொல் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது.
             சிவனே முழுமுதற் கடவுளாகக் கொள்ளப்பட்டான்.
             சிறு தெய்வவழிபாடும் சங்க காலத்தில் நிலவி வந்தது.
             கள்ளி நிழற் கடவுள், கூளி போன்ற சிறுதெய்வங்களுக்கும் வழிபாடு நடத்தப்பட்டது.

சங்க காலத்தின் இறுதி

             மதுரை மாநகரில் நடைபெற்று வந்த கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நூ ற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது.
             பாண்டிய நாட்டில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
             இப்பஞ்சம் சுமார் பன்னிரண்டாண்டு நீடித்ததாகத் தெரிகிறது.
             இதனால் பலர் வெளியில் சென்று வாழ்ந்தனர்.
             மேலும் ஆரியப் பண்பாட்டின் கலப்பினால் பழந்தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டது.
    களப்பிரர் என்னும் பிரிவினர் தமிழகத்துள் படையெடுத்துச் சேர, சோழ, பாண்டியர்களை வென்று ஆட்சி புரிந்தனர்.
    இவர்களது காலத்தில் பல இலக்கியங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
   அதனால் தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்பர்.
   இக்குலத்தவரின் காலத்தில் யாதொரு முன்னேற்றத்தையும் தமிழகம் அடையவில்லை. பலகலைகள் அழிந்தன.
             இவைகளோடு பழைய பண்பாடும் அழியத் தலைப்பட்டது.
             இவ்வாறாச் சங்க கால அரசியல் ஒரு முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment