LATEST

Thursday, January 30, 2020

சோழ மன்னர்கள் - உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகால் சோழன்

சோழ மன்னர்கள் - உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகால் சோழன்

உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி

•    சங்க காலச் சோழ மன்னர்களுள் காலத்தால் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுபவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி ஆவான்.
•    இவன் அழகினை உடைய பல தேர்களைக் கொண்டவன் ஆதலின் இப்பெயர் பெற்றான் என்பர்.
•    இவனைப் பற்றிப் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் (புறம் 4, 266) உள்ளன. இப்பாடல்கள் இவனுடைய வீரம், நால்வகைப் படைப் பெருமை, கொடை ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன. 
 

கரிகால் சோழன்

•    இவன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் ஆவான்.
•    தாயின் வயிற்றில் இருக்கும்போதே அரச உரிமையைப் பெற்ற சிறப்புடையவன்.
•    இதனைப் பொருநராற்றுப்படைபின்வருமாறு கூறுகிறது.
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்
தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி
(பொருநராற்றுப்படை: 130,132)

•    உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்துபட்டபோது கரிகாலன் மிகவும் இளையவனாக இருந்தான்.
•    அரசைக் கைப்பற்றும் சூழ்ச்சியுடன் அவனுடைய தாயத்தார் அவனைச் சிறைப்பிடித்து வைத்து, சிறையைத் தீக்கு இரையாக்கினர்.
•    தீயிலிருந்து தப்பித்துச் செல்லும்போது அவன் கால்கள் தீப்பட்டுக் கருகிவிட்டன. இக்காரணத்தால் அவன் கரிகாலன் அதாவது கரிய காலை உடையவன் என அழைக்கப்பட்டான்.
•    சங்க இலக்கியத்தில் இவனைக் கரிகால் என்று அன் என்ற ஆண்பால் விகுதி சேர்க்காமல் குறிப்பிட்டுள்ளனர்.
பெருவளக் கரிகால்
(அகநானூறு, 125: 18)
பெரும்பெயர்க் கரிகால்
(அகநானூறு, 246: 8)

•    மேலும் இவன் வளவன், கரிகால் வளவன், கரிகால் பெருவளத்தான், திருமாவளவன் என்ற பெயர்களாலும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளான்.
•    கரிகால் சோழன் சிறிது காலம் ஆட்சி புரியாமல் இருந்தாலும் பின்னர் சோழ நாட்டின் ஆட்சிப் பீடத்தில் முறைப்படி அமர்ந்தான்.
•    ஆட்சியைப் பிடித்தவுடன் தன் பகைவர்களைக் குறிப்பாகத் தன் தாயத்தார்க்குத் துணை நின்றவர்களை வென்றான்.
•    வெண்ணிப் போரில் தோல்வியுற்ற வேளிர் பதினொருவரில் உயிர் பிழைத்துத் தப்பிய ஒன்பதின்மர் வாகை என்னும் இடத்தில் கரிகால் சோழனை மீண்டும் போரில் எதிர் கொண்டனர்.
•    இப்போரிலும் கரிகால் சோழன் வெற்றி கொண்டான். பின்பு பகைவர் நாடுகளில் சோழப்படை புகுந்து பெரும் அழிவை விளைவித்தது. ஒளியர், அருவாளர், வடவர், குடவர், தென்னவர், பொதுவர் போன்ற பகைவர் பலரையும் வென்று அடக்கினான் கரிகால் சோழன்.
•    கரிகால் சோழன் சேரமன்னன், பாண்டிய மன்னன், வேளிர் போன்றோரை ஒருங்கே தோற்கடித்ததால் தமிழகம் முழுவதும் அவனுடைய ஆட்சியின் கீழ் வந்தது. இருப்பினும் வட நாட்டுக்கும் சென்று இடையில் உள்ள மன்னர்களை எல்லாம் வென்றான்.
•    இமயம் வரை சென்று அங்குத் தன் நாட்டின் புலிக் கொடியை நாட்டி விட்டு வந்தான்.
•    கரிகால் சோழன் சிறந்ததொரு கப்பற்படையையும் கொண்டிருந்தான்.
•    இப்படையுடன் இலங்கை மேல் போர் தொடுத்தான் அதில் வெற்றியும் எய்தினான். இதுபற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டு வந்து, அவர்களைக் கொண்டு காவிரியாற்றின் கரையை உயர்த்தி அமைத்தான்.
பொன்னிக் கரை கண்ட பூபதி
(விக்கிரம சோழன் உலா-26)
•    கரிகால் சோழன் காலத்தில் தமிழகம் செழிப்புற்று விளங்கியது. சமணப்பள்ளிகள் பலவும், பௌத்தப் பள்ளிகள் பலவும் பூம்புகாரில் சச்சரவு ஏதும் இன்றி அமைதியாக நடைபெற்று வந்தன.
தவப்பள்ளி தாழ் காவின் (பட்டினப்பாலை: 53)
•    கரிகால் சோழன் தன்னைப் பட்டினப்பாலை என்னும் நூல் கொண்டு புகழ்ந்து பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு அளித்தவன் ஆவான். இதனைக் கலிங்கத்துப் பரணி,
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்
(கலிங்கத்துப்பரணி, 198: 2-4) 
என்று குறிப்பிடுகிறது.
•    கரிகால் சோழன் சோழ நாட்டில் உள்ள காடுகளை அழித்து, அவற்றை விளைச்சல் நிலங்களாக மாற்றினான்.
•    பாசன வசதிக்காகக் குளங்கள் வெட்டினான்.
•    கல்லணையைக் கட்டினான். இவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் முக்கியத் துறைமுகப் பட்டினமாக விளங்கியது.

No comments:

Post a Comment