LATEST

Thursday, January 30, 2020

பாண்டிய மன்னர்கள் - பாரி, அதிகமான் நெடுமான் அஞ்சி, கோசர்

பாரி, அதிகமான் நெடுமான் அஞ்சி, கோசர் 

  பாரி 

•    பாரி என்பவன் கபிலரின் நண்பனாவான். இப்பாரி வேளிர் குலத் தலைவனாவான்.
•    பாண்டிய நாட்டில் பறம்பு மலை சூழ்ந்த முந்நூறு ஊர்களைக் கொண்ட பகுதியை ஆட்சி புரிந்து வந்தான்.
•    இப்பாரியின் கொடையும் வீரமும் பற்றிக் கபிலர் புறநானூற்றில் பல பாடல்களில் பாடியுள்ளார்.
•    இவன் முல்லைக் கொடி பற்றிப் படரும் பொருட்டு, அதற்குத் தன் பெரிய தேரையே நல்கிய ஈகைத் திறத்தைச் சிறுபாணாற்றுப்படை பின்வருமாறு கூறுகிறது.
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்....... (சிறுபாணாற்றுப்படை: 89-91)

•    இப்பாரியின் பறம்புமலையைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் முற்றுகையிட்டனர் என்று கபிலர் கூறுகிறார்.

அதிகமான் நெடுமான் அஞ்சி

•    அதிகமான் நெடுமான் அஞ்சி சங்க காலத்து வேளிர்களில் சிறப்புப் பெற்று விளங்கினான்.
•    தற்போதைய தர்மபுரி மாவட்டம் அக்காலத்தில் அவனது ஆட்சியின் கீழ் இருந்தது என்பர்.
•    தகடூர் அவனது ஆட்சிக்குத் தலைநகராக இருந்தது. ஒளவையாரின் சிறந்த நண்பனாக அஞ்சி விளங்கினான்.
•    இவன் ஒளவையாருக்கு இறவாப் பேற்றினை நல்கும் அரிய நெல்லிக்கனியைக் கொடுத்து உதவினான்.
•    இந்த அதிகமான் சேர வேந்தனின் மேலாண்மையைப் புறக்கணித்துத் தன்னாட்சி பெற முயன்றான் என்றும் கூறுவர்.
•    அப்போது சேர நாட்டை ஆண்டு வந்த பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் மீது படையெடுத்து வெற்றி கொண்டான்.
•    மேலே கூறப்பட்டவர் இல்லாமல் ஓரி, நன்னன், பேகன், நள்ளி போன்ற வேளிரும் சிறப்புடன் ஆட்சி புரிந்தனர்.

கோசர்

•    வேளிரைப் போலவே கோசர் என்ற குடியினரும் தமிழகத்தின் வட திசையிலிருந்து தமிழகம் வந்து குடி அமர்ந்தவர் ஆவர்.
•    கோசர்களுக்கும் வேளிர்களுக்கும் பகைமை இருந்து கொண்டே இருந்தது எனக் கூறுவர்.
•    இக்கோசர் மூவேந்தர்களுக்கும் உறுதுணையாக இருந்தனர்.
•    துளு நாட்டைக் கோசர்கள் ஆண்டு வந்தனர் என்றும் கூறுவர்.
•    அசோகரின் கல்வெட்டுகளில் கூறப்பட்டிருக்கும் சத்திய புத்திரர்கள் கோசர்களாக இருக்கலாம் என்றும் கூறுவர்.
•    சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் இவர்கள் வாய்மொழிக் கோசர் (உண்மையே பேசும் கோசர்கள்) எனக் கூறப்படுகின்றனர்.
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளம்கெழு கோசர் (அகநானூறு, 205: 8-9)

(நிலைஇய = நிலைபெற்ற் சேண் = நெடுந்தூரம்; நல்லிசை = நல்ல புகழ்)
அகுதை, திதியன், குறும்பியன், ஆதன் எழினி, நமும்பன் ஆகியோர் கோசரில் சிறந்த வீரர்கள் என்று போற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment